மூடு மந்திரம் 14 (தொடர் கதை)

இந்த வாரம் தான் தனியாக குளிக்க ஆரம்பித்திருந்தாள் ....எத்தனை நாள்தான் சித்தியை சிரமப் படுத்துவது.... தடுமாறினாலும் ஒரு வழியாக தானாகவே மார்பு வரை பாவாடையை ஏற்றி இறுக்கி கட்டிக் கொண்டு வேக வேகமாய் குளித்தாள் .... அது பெண்களுக்கான குளியலறை என்றாலும் அத்தனை கூச்சம் அவளுக்கிருந்தது ...

ஒரு நீள அறையில் இடதுபுறம், வலது புறம் என்று வரிசையாக ஆறு குளிலறைகள்தான்....ஆனால் அரசின் சாபக் கேடு.... ஒன்றில் கூட கதவு இல்லை.. இது குளிப்பவர் அனைவருக்கும் ஆரம்பத்தில் ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தி பின் அனைவரும் பெண்கள் தானே என்ற நம்பிக்கை விதைத்து, மார்பு வரை பாவாடை வளர்த்து, இப்படி குளியல் அரங்கேற்றப் பட்டு வருகிறது.....

அப்படி, அனகாவின் எதிரே இருக்கும் குளிலறையில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அந்த சிவத்த உடல் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்ததது.. கொஞ்சம் கூட வெக்கமோ பயமோ எதுவுமேயில்லை..... கோபம் கொப்பளித்தது அனகாவுக்கு...மெல்ல பயமாக கூட மாறியது.... பயம் மெல்ல ஒரு தடுமாற்றத்தை உணர செய்தது.. அவளின் உடல் நடுங்கியது ...சட்டென பார்வையை திருப்பி கொண்டு வேக வேகமாக குளிக்க ஆரம்பித்தாள், உடலை சுற்றிய பாவாடையுடன்..

சட்டென யாரோ தோளைத் தொட்டது போல உணர்ந்த அனகா....சடாரென திரும்பினாள் .... நிர்வாணமாய் குளித்த அந்த பெண் ஆடை அணிந்தபடியே நின்று கொண்டிருந்தாள்..
என்னம்மா. தப்பா நினைச்சிட்டியா என்றாள் கண்கள் கலங்க....

என்ன சொல்வது என்று விளங்கவில்லை, மலங்க மலங்க விழித்தாள் அனகா.....
அவளின் பதிலுக்கு காத்திராமல் அவளே தொடர்ந்தாள் ..

இன்னையோட என் பொண்ணுக்கு டிச்சார்ஜ்ம்மா.... இன்னைக்கு நாங்க ஊருக்கு போறோம்... எனக்கு வயசு 42. இந்த 42 வயசு வாழ்க்கைல விவரம் தெரிஞ்சு ஒரு நாள் கூட அம்மணமா குளிச்சது இல்ல..... அப்படி தான குளிக்கணும்... மேல மறைச்சு கீழ சோப்பு போட்டு, கீழ மறைச்சு மேல சோப்பு போட்டு, எப்படா குளிக்க வருவாளுகன்னு வாய தொறந்துட்டு பாக்கலாம்னு, நாய் மாதிரி காத்துக் கிடக்கற தே ............. பசங்கள எல்லாம் தாண்டி ஒரு தடவ குளிச்சு முடியறதே குழந்த பெக்குற மாதிரி..... கக்கூஸ் அள்ளறது தான் என் வேல...... எங்கூரு பேரே சேரி தான்..... ரெம்ப நாளா பாத்ரூமுக்குள்ள எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு சுததிரமா, ஆசை தீர குளிக்கணும்னு ஆசை இருந்துட்டே இருந்துச்சு.. அது என் மக மண்ட உடஞ்சதுல இங்க நிறைவேறிடுச்சு.......இங்கயும் நேத்து வரை பயந்து பயந்துதான் குளிச்சேன்.. இம்மாம் பெரிய ஆஸ்பத்திரியில பாத்ரூம்க்கு கதவு இல்ல.. அதுக்காக நம்ம ஆசையை விட்ர முடியுமா...? அதான் கூடி கழிச்சு பார்த்துட்டு குளிச்சிட்டேன்.. தப்ப நினைச்சுக்காதம்மா.... உங்கம்மாவா நினைச்சுக்கோ அம்மாவோட அம்மணம் சாமிக்கு சமம்..... சரியா என்று கன்னத்தை கிள்ளி வாய்க்குள் போட்டபடி அவள் போய் விட்டாள் ....

எதுவுமே விளங்க வில்லை ஆனால் என்னமோ செய்தது அனகாவுக்கு.. சரி எது தவறு எது என்று முடிவுக்கு வர முடியவில்லை.. வேக வேகமாய் குளிக்க தொடங்கினாள் ... அந்த அம்மாவின் வார்த்தைகள் உடலெங்கும் தண்ணீராய் விழுந்து கொண்டே இருந்தது....

மூடு மந்திரம் ...................தொடரும்

எழுதியவர் : கவிஜி (15-Jul-13, 10:14 am)
பார்வை : 762

மேலே