ஒரு வாலி வதைப்படலம்.

ஒரு வாலி வதைப்படலம்.
======================================ருத்ரா

வாலி வதைப்படலம்
அந்த நுரையீரல்பூக்களின்
மராமரங்களுக்கு இடையிலா?

எமதர்மன்
ராமன் வேடம் போட்டு
வந்தாலும் வந்திருப்பான்.
தமிழ் மேல் காதல் கொண்டது
வாலியின் குற்றம் அல்ல.

எதிர்மறையான ஒரு கதா"பாத்திரத்தில்"
வழிய வழிய‌
தமிழ்க்கவிதை வடித்ததும்
குற்றம் போலும்.

ராவணன் என்ற புனைபெயரில்
ராமாயணம் எழுதியது போல் தான்
வாலி
தமிழ்க்கவிதை என்றொரு வாள் தூக்கினான்
என்று
"மடி" யாகிப்போனதே என்று சிலர்
மனம் நொந்திருக்கலாம்.

பக்கம் பக்கமாய்
என்னை அவதார புருஷனாய்
உயிர்ப்பித்துத் தந்த
இந்த கவித்திருமுகமா
வதை படுவது
என்று அந்த சக்கரவர்த்தி திருமகனே
அவர்க்கு
"மடி" சுமந்து இருக்கும்
மானசீக காட்சியே அங்கு தெரிகிறது.

ஆனால்
வாலியின்
ஆத்மிக உள்ளத்திலும்
தமிழே செழித்தது.

பகுத்தறிவு வாதத்தை
அவன் பயங்கரப்படுத்தவில்லை.
திராவிட எழுச்சியைக்கண்டு
அவன் இன்னமும் எழுச்சி கொண்டான்.

கலைஞர் கவிதை மீதும்
கிறக்கம் கொண்ட‌
கலைஞன் அல்லவா அவன்.

வெண்தாடி வேந்தருக்கும்
இவர் வணக்கம் செய்யும்
ப்டம் ஒன்றில்
கருப்பு சூரியனுக்கு
இவர் ஆதித்ய ஹ்ருதயம்
சொல்வது போல் தான் இருந்தது.

வாலியின் பாடல்களில்
எதுகையும் மோனயும்
கொண்டிருந்தது
இலக்கிய கூட்டணி அல்ல.
ஒரு அரசியல் கூட்டணியே ஆகும்.
நான் ஆணையிட்டால்
என்று
அவன் பேனா
சாட்டையை சொடுக்கிய போது
தமிழ் நாட்டின் அரசியல் சரித்திரம்
சரிந்தே போனது.
காலைச்சூரியன் கண்விழிக்கப்போகிறது
என்ற தைரியத்தில்
இருட்டில் நீதி மறையட்டுமே
என்று
அவன் எழுதியதில்
எத்தனை நம்பிக்கை.
எத்தனை வெற்றி.

புதுக்கவிதையை விழுங்கி
மரபுக்கவிதையை
புடம் போட்டவன். அவன்.

சொல் தெறிக்கும் பொருளுக்குள்
பொறி பறக்க வைத்தவன் அவன்.

தமிழ்ச்சொல்லை
அவன்
ஒடித்து ஒடித்து
போட்டாலும்
அவை கற்கண்டுகள்.

கண்ணதாசன்
திராவிட வழியாய் வந்து
ஆரியத்தை ஆலிங்கனம்
செய்துகொண்டவர்.

வாலியோ
ஆரியத்தைக்கூட‌
வளைத்து நிமிர்த்தி
ஒரு மாதிரியான‌
திராவிடமாக்கிக்கொண்டவர்.

எந்த வரிகள் பாடியிருந்தாலும்

"வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு"..
என்று எழுதியிருந்தாரே
அதில் எரியும் கண்ணீர்த்தீக்கு
எத்தனை "நோபல் பரிசு"கள்
வந்தாலும்
அந்த "டைனமைட்" கண்டுபிடித்த‌
நோபலே
மனம் நொந்து "தூள் தூளாய்"
உடைந்து போயிருப்பான்.
இவன் கவிதைக்கு என்று
தனியாக அல்லவா
ஒரு பரிசுக்கமிட்டி அமைக்கவேண்டும் என்று
தவித்திருப்பான்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
என்று
முழங்கிக்கொண்டு வந்தார்
அவரவர்களுக்கு வேண்டியதை
அவரவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
எல்லாருமே மறந்து போனார்கள்
அவர் மூச்சிலும் உள்ள‌
தமிழ் என்ற மூன்றெழுத்தை.

========================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (25-Jul-13, 12:53 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 94

மேலே