எழுத்து வியாபாரம்
அச்சரங்களின் அடுக்குகளில்
துடைக்கப்படும் தூசுகளில்
கூட்டும் அலங்காரங்களில்..
வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்
மாறிக் கொண்டே இருக்கிறது
தூரிகைகளின் வர்ணங்கள்...!
கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி
சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு
எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளின்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்
என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்
மரித்துப் போன அர்த்தங்களின்
கல்லறைகளில் தொடங்குகிறது
ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!