நல்ல நண்பன் நல்ல ஆசான்!!!

நண்பா..!
நம் நட்பை நான் நேசிக்கிறேன் - அந்த
நேசிப்பைக் காதலிக்கிறேன்
காரணத்தோடு உன்னை நான் நேசிக்கவில்லை
காரணம் நான் உன்னை
என் இதயத்தில் வைத்திருக்கவில்லை
இதயமாகவே வைத்திருக்கிறேன்...!

நொடிக்கொரு சண்டை
இருந்தும் நாம் பிரிந்ததில்லை
இதயத்தில் ஒன்றானதால்....

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது
பிறரை மகிழ வைப்பதில் தான் இருக்கிறது என்பதை அறிந்து
எல்லோரையும் உன் குறும்புகளால்
மகிழ வைத்தாயே..!

என்
அனைத்துப் பயணங்களிலும்
கைகாட்டிமரமாய் முளைத்து
நல்ல திசைகளை நோக்கி
நகரச் செய்தாய் ....
என்னை நான் செதுக்கிட
உன்னையே உளியாய் தந்து
என் பலத்தை
எனக்கே உணரவைத்தாய்..!

நீ
என்னைப் பத்துமாதம்
சுமக்கவில்லை; இருந்தும் -நண்பா...
உன் கண்களில் பார்க்கிறேன்
தாயின் மறு உருவத்தை ...!

போலி அன்பு காட்டும்
கோடி உறவுகள் வேண்டாம் எனக்கு
உரிமையோடு சண்டை போட்டாலும்
உண்மை உறவு
உன் உறவு போதும் எனக்கு...!

நட்பாக இருந்தாலும் சரி...
நல் உறவாக இருந்தாலும் சரி...
அளவோடு பழகினால் ஆயுள் வரை...
அளவிற்கு மீறினால் பாதிவரை...!

உன்மேல் அளவுக்கு அதிகமாய்
அன்பு வைக்கும்முன்
அறிய மறந்துவிட்டேன்...
நிலையில்லா இவ்வுலகில்
நிரந்தரம் ஏதும் இல்லையென்று
நீயும்தான் ...!

இந்த உலகில்
நாம் விரும்பியவர்கள்
நம்முடன் இல்லை என்றாலே
நாம் அனாதைதான்...
என்னை
அனாதையாக்கி சென்றாயே ஏன் ?

சந்தேகம் என்னும் தீயால்
என்னை மெழுகுவர்த்தியாய் ஏற்றி
தூரத்தில் இருந்து பார்க்கிறாயே...
ஒளிதான் தெரியும் உனக்கு
அருகில் இருந்து பார்
என் கண்ணீரும்
புரியும் உனக்கு!!!

உண்மையான அன்பிற்கு
ஏமாற்றத் தெரியாது
ஏமாறத்தான் தெரியும்
என் அன்பு உண்மையானது
ஏமாறி விட்டேன்...

காயங்கள் தாங்காத கல்
தெய்வமாவது இல்லை
வருத்தங்கள் வராத
வாழ்வு வசந்தமாவது இல்லை
பிரச்சனைகள் இல்லாத வாழ்வை
வேண்டுவதைக் காட்டிலும்
அதைச் சமாளிக்கும்
மனப்பக்குவத்தையும் வளர்த்துக்
கொள்கிறேன்....

மனித மனம் பக்குவப்பட்டால்
காக்கையின் குரல் கூட
கானமாய் ஒலிக்கும்
ஒலிக்கிறது நண்பா
எனக்கு கானமாய்!!!

வாழ்வின் அனைத்துப் பாடங்களையும்
கற்றுக்கொடுத்து ஒரு நல்ல நண்பனாய்
மட்டுமின்றி நல்ல
ஆசானாயும் விளங்கினாய்
இன்று பக்குவப் பாடத்தை-பக்குவம் இழந்து
கற்றுக்கொடுக்கிறாய்
மிக்க நன்றி நண்பா!!!

இதில் நான் உன்மீது கோவப்படுவதற்கோ
வருதப்படுவதற்கோ ஏதும் இல்லை
ஆசானாய் உன்கடமையை செய்கிறாய்
வலியுடன் வழிவிட்டு நிற்கிறேன்,,,,

தேவையான நேரத்தில்
காட்டப்படாத அன்பு பின்பு
ஆயிரம் ஆண்டுகள்
தொடர்ந்து வந்தாலும்
அர்த்தம் அற்றது -நண்பா
ஆசானாய் கடமையை செய்யும் நீ
நல்ல நண்பனாய் கடமையை
செய்ய தவறிவிடாதே...

சதிச்செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டு இருந்த
நான் குற்றவாளியா ?
நம் நட்பில் ஊமையாகி
போன உண்மைகள் பல
அவ் உண்மைகளுக்கு
எங்கும் செல்லாத
என் மனசாட்சியே -சாட்சி
நண்பா-
விடை இல்லா கேள்விகளும்
வாழ்க்கையினில் சில உண்டு ..!!!!
.....புரிந்துக்கொள் .....

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (27-Jul-13, 8:24 am)
பார்வை : 2714

மேலே