பயணங்கள் தொடரும்...

மௌனித்த மனதுக்குள்
மனிதத்தின் பிரளயம்
சாதிக்க மறந்த சாளரம்
சப்தித்துப் போன சங்கீதம்
ஜனனத்தில் மரித்த மானிடம்
ஜீவனற்றுப் போன ஓவியம்
அவமான நரம்புகளில்
அக்கினிச்சுருதி சேர்த்து
ஆரூடம் இசைக்க துடிக்கிறது

தென்றல்களில் தோற்று
தேன் இசைகளில்
தெவிட்டிய இருதயம்
காற்று மண்டலத்தை
கைது செய்து
வேற்று மண்டலத்தில்
விதைக்க விஷ்வரூபம் எடுக்கிறது

இமைகளுக்குள் தூங்கிய
இளம் விதை
இமயங்கள் நடுங்க
இடியுடன் முடி சூடும்
இறகுகளாய் தாலாட்டும்

அவமான சிறைகளின்
ஆயுள்கைதி
ஆலகாலங்களை உண்டு
அமரத்துவம் சொரியும்

மின்மினிக்குள் மறைந்த
மின்னல்கள்
மின்னல்களாய் மாறிய
மின்மினிகளை மிரட்டும்
ஆகாய மார்பை
ஆயிரம் முறை கிளித்து
அக்கினிப் பிரசவமாய்
அண்டம் அதிர அவதரிக்கும்

பாதை வேண்டிய பயணங்கள்
பயனற்றுப் பயணித்த பாதங்கள்
பத்துமுறை தீக்குளிக்கும்
பலமுறை பரினமிக்கும் - இனி
பாதங்கள் தூண்டிய பயணங்களில்
பயணங்கள் தோண்டிய பாதைகளில்
பயணங்கள் தொடரும்.....

எழுதியவர் : jananaram (29-Jul-13, 8:39 pm)
பார்வை : 112

மேலே