வணங்கிடேன் வந்துன் கோயில்

கல்லாகப் படைத்தா ருன்னைக்
காவலாய் வைத்தா ரிங்கு
பொல்லாத பாவம் செய்வார்
பொழுதொடுன் னடியில் வந்து
எல்லாம் மாய்ப்பா யென்று
ஏங்கியே கண்ணீர் மல்கும்
வல்லவர் வாழும் மண்ணில்
வணங்கிடேன் வந்துன் கோயில்.



என்னுயிர்த் தமிழால் ஓதார்
ஏய்த்திடும் மார்க்கம் தேடி
என்றோ இவ்வுலகி லான்ற
ஆரிய மொழி யாலுனை
நன்றெனத் தொழுவார் தொல்லை
நாற்றமெ டுத்தோ டும்கால்
மன்றினை மனதி லேற்றி
வணங்கிடேன் வந்துன் கோயில்.


பஞ்சமும் பிணியும் வாட்ட
பாரிதில் மாயும் மாந்தர்
கஞ்சியைக் காணத் தானும்
கைப்பொருளீயார்,உன்னை
நெஞ்சினி லேற்றிப் பொங்கி
நினைத்தினம் வேண்டி யேங்கும்
வஞ்சகர் வாழும் காலம்
வணங்கிடேன் வந்துன் கோயில்.


ஊழ்வினைப் பயனைப் போக்க
உன்னருள் வேண்டி நிற்பார்
ஏழ்மையைக் கொண்டார் வாழ்வில்
ஏற்றியே மூடக் கொள்கை
தாழ்நிலை தன்னில் தள்ளித்
தரணியை ஏய்த்துத் தங்கள்
வாழ்வினக் கொள்வார் உலகில்
வணங்கிடேன் வந்துன் கோயில்.

எழுதியவர் : (3-Aug-13, 2:12 am)
பார்வை : 61

மேலே