பள்ளி செல்லும் பாலகனே

பள்ளி செல்லும் பாலகன் நீ
துள்ளி குதிக்கும் மானை போல்
துயிலில் எழுவது சிறபன்றோ
அதிகாலை எழுவது மிகு சிறப்பு

காலை கடனை முடித்தாயோ
கனிவுடன் காப்பி குடித்தாயோ
பையை திறந்து நூல் எடுத்து
மனதில் பாட பால் நிரப்பு

சிறு மனதில் கல்வி ஏற்பித்தல்
பசுமரத்தில் ஆணி அடிப்பது போல்
சிறப்பாய் ஒட்டி கொள்ளுமடா
சுட்டி பையா இதை நீ அறிவாயோ

சிற்றுண்டியை ருசிக்கும் முன்
சிறு குளியல் நிச்சயம் நிறைவேற்று
சீராய் புத்தகம் பையில் அடுக்கி
சீருடை அணிந்து புறப்படுவாய்

வகுப்பறையில் நீ சென்றாயோ
வளவள என்று கதை பேசாமல்
வகுப்பாசிரியர் வந்தவுடன்
வணக்கம் எழுந்து சொல்வாயோ

பயிற்றும் பாடம் கவனித்து
பயிலும் பழக்கத்தை காத்திட்டு
பதிலை சொல்ல தயங்காதே
பள்ளி தேர்வை கண்டு பதறாதே

பக்கம் அமர்ந்த பையனுடன்
பல கதைகள் பேசி இருந்து விட்டு
பரீட்சையில் கோட்டை விடாதே
பலர் கொச்சை பேச்சை கேட்காதே

மாலை வீடு வந்தாயோ பக்கத்து
சோலை சென்று விளையாடு
மறவாது வியர்வை துடைத்திட்டு
உடல் சோர்வை தீர்த்து விரைந்திடு

உள்ளே வீட்டில் வந்தாயோ உடன்
உடல் மாசை களைந்து உடை மாற்று
காய்ச்சிய பாலில் சிறு மிளகிட்டு
கடகடவென்று குடித்து விட்டு

தொலைகாட்சி தொடரை பார்க்காதே
தொலை கனவு காட்சி தொலைக்காதே
முந்தி முடித்த பாடம் படித்திடுவாய்
மீதி முடிக்கும் பாடம் எழுதிடுவாய்

முன்னிரவில் தூங்க சென்று
முத்திரை உறக்கம் கொண்டிடுவாய்
பத்தரைமாற்று தங்கம் போல்
மறுநாள் நித்திரை நீங்கி எழுவாயே

ஜாதி மதத்தை என்றும் பார்க்காதே
மீதி மனித நேயத்தை மறக்காதே
ஏழையை கண்டால் வெறுக்காதே
ஏந்தும் கரத்தை விரட்டி வைக்காதே

நல்ல நண்பனை நீ நேசித்து
நல்லொழுக்கம் பலதை யாசித்து
நால்வர் புகழை சுவாசித்து
நல்பிள்ளை எனும் பேர் பெறுவாய்
சினான் மகனே சிந்திப்பாய்
சினம் கொண்டு என்னை ஏசாதே..!

எழுதியவர் : குமரி பையன் (3-Aug-13, 2:09 pm)
பார்வை : 144

மேலே