வாழும் என் தலைமுறை

என்ன!
என்னை நினைத்தா
நீ கலங்குகிறாய் ?
வேண்டாம்
நான் நலமாயிருப்பேனென
நம்பு
அவர்கள் உன்னை
கற்பழித்த பின்புதான்
நான் உன்னை
நேசிக்க தொடங்கினேன்
அதற்காய் நான் அவர்களுக்கு
நன்றி சொல்வேன்
உன்னை காதலிக்கக்கிடைத்ததே
நான் செய்த பெரும் பாக்கியம்
அவர்கள் உன்னை
தீண்டிய பின்புதான்
உன்மேல் எனக்கு
பாசம் பொங்கியது
அதற்கு முன்
உன்னை நான்
எத்தனை தடவைகள்
இம்சித்திருப்பேன் - உன்
முகத்தில் எத்தனையோ தடவைகள்
காறி உமிழ்ந்திருக்கிறேன்
எத்தனையோ தடவைகள்
உன்னை நான்
காயப்படுத்தியுள்ளேன்
இன்று நீயென்
காதலுக்குரியவள் - இனி
எவரும் உன்னைத் தீண்ட முடியாது
உன் மடியில்
தலை சாய்த்து
துயிலும் பொழுதுதான்
உறக்கமே உயர்வடைகிறது - உன்
மேடு பள்ளங்களை
காடு கரம்பைகளை
காவல் செய்ததையிட்டு
நான் இன்று கர்வமடைகிறேன்
என் குருதி
உன்னுடம்பில்
சிந்திய போது
கண்ணீர் விட்டாயாமே ?
அடி மடைச்சி!
இது உலக வழக்கம்தானே!
இதற்காகவா
நீ கலங்குகிறாய் ?
வேண்டாம் தாயே !
நான் நலமாயிருப்பேனென நம்பு
அடியே!
என் காதலுக்குரியவளே!
என்னை தாங்கி நின்ற
தங்கத்தாம்பாளமே!– என்
உயிரினும் மேலான
தாய்த்திருநாடே!
என் இறப்பு வரையும் நான்
உனக்காய் வாழ்வேன்
என் மரணத்தின் பின்
உனக்காய் என்
தலைமுறை வாழும்

எழுதியவர் : மு.யாழவன் (7-Aug-13, 10:44 pm)
சேர்த்தது : yazhavan
பார்வை : 61

மேலே