அந்தமான் –கறுப்பு தீவுகள்

ஒவ்வொரு
கப்பலின் வருகையிலும்
அலைகளை விட
வேகமாய் கொந்தளித்தன
தீவுகள்
தேசம் தொலைத்தவர்களின்
கண்ணீர் குமுறல்களாய்....
..............................................................................
ஒன்றுபட்ட தேசத்தின்
பாதச்சுவடுகளை
பூசிக்கொண்டன
தாயை பிரிந்து
தனித்திருந்த மணல் திட்டுகள்
...................................................................
செக்குகளின் நடுவில்
கசிந்து கொண்டிருந்த
எண்ணையாய்
விடுதலை உணர்வின்
ரத்த துளிகள் ..............
........................................................
நிசப்த இரவுகளில்
மூங்கில் காடுகளின் ஓலங்களாய்
மண்ணிற்காக
மகனை இழந்தவளின்
கண்ணீர் குமுறல்கள் ................
....................................................................
உயிர்க்கொடையின்
உச்சத்தில்
ஒவ்வொரு செல்லிலும்
சுதந்திரம் மட்டுமே
பிளாஸ்மாக்களாய்
மைட்டோகாண்டிரியாக்களாய்
இயங்கி கொண்டிருந்ததாலா
இது செல்லுலார் சிறை ......
....................................................................................
இன்றெனக்கு விடுதலை
என்ற சிறையுரை கடந்து
என்று நமக்கு விடுதலையென
தேசத்தின் வாசங்களையே
நுகரதுடித்த நாசிகளில்
அடிமை காற்றையும்
நுழைய தடுத்து
மறித்து போன
உயிர்களின் கல்லறை
.....................................................................................
தூக்குக்கயிறு
தொண்டைக்குழியை
நெருக்கும் போதெல்லாம்
புடைத்து விரிந்தன
சுதந்திர மண்ணின் நாளங்கள் .............
..........................................................................
வாழ்வும் சாவும்
வெளிச்சத்திற்கு வராமலேயே
இருட்டடிக்க பட்டதாலா
கறுப்பு நீரென்ற
கறையை சுமந்தன
கரைகள்
.............................................................
கொல்லப்பட்டவர்களின்
உள்ளக்குமுறலை
உண்டு தின்றதாலா
இன்றும் தொடரும்
நிலநடுக்கங்கள்
சுதந்திர போரின்
வலிக்குவியல்கள்
..........................................................................
யாரிடம் சொல்லி அழுவது
என் தேசத்தின் காற்றில்
அவர்களின் கடைசி மூச்சின் உஷ்ணமும்
கண்ணீர்த்துளியின் ஈரமும்
இன்றும் பரவித்தான்
உள்ளதென்று ....
....................................................................................
ஈனமாகத்தான் இருக்கிறது
ஆங்கில மொழிக்காக
நாவெனும் வாலில்
விசுவாசம் காட்டும்
நாயினங்களாக
மாறிய நம்மை நினைகையில் ...
..................................................................
மாறாமல் இருக்கின்றன
மனிதம் இல்லா
வதைகளின் வலிகள்
இப்போதெல்லாம்
கறுப்பு நீரின் கண்ணீர் வலிகள்
குவாண்டநாமோ...வில்
குடி பெயர்ந்து விட்டன
மனிதம் புசிக்கும்
ஓநாய்கள் மட்டும்
ஒழிவதே ...இல்லை
..................................................................................................
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : sindhaa (15-Aug-13, 11:28 am)
பார்வை : 368

மேலே