யாசகனின் வாசகங்கள்

தவழும் வயதில்
என் தாய் தாய்பாலுடன்
ஊட்டியது வறுமை;

தினம் பிறந்து
மறவாமல்
என்னை வாட்டியது பசி;

உயிர் துறந்த பெற்றோர்
எனக்கு விட்டு சென்ற
பட்டம் - அனாதை ;

வறுமையின் சுமை
என் விழிகளில் ஏறியது;
என் வாழ்க்கையின்
சுமையால் விரல்கள் ஏந்தியது;

என் சிறுவயது எண்ணங்கள்
அனைத்தும் செல்லாக் காசுகள் ;

தவறாக எண்ணாதீர்-
எனக்கும் தாவணிக் கனவுகள்
கற்பனையில் வருவதுண்டு;

தெருவோர உணவில்லா உறக்கம்
அனைவரும் பணம்போட்டு
பார்த்து செல்லும் கண்காட்சி;

என் இல்லாமை
எனக்கு மூலதனம்;
மெலிந்த உடலே
எனக்கு தரும் ஆதாயம்;

என் தொழிலுக்காக
வருந்திய நாட்களும் உண்டு;
ஊரெல்லாம் கடன்வாங்கி
ஒய்யார வீடு கட்டி
அடுத்தவர் வயிற்றில் அடித்து
பிழைக்கும் ஒருவன்
ஒரு ரூபாய் போட தயங்கிய
அந்த ஒரு நிமிடம்
நான் உண்மையில் வருந்தினேன் ;

இறுதியாக ஒன்று!
நான் இறப்பதற்குள்
என் உண்மை பெயர் சொல்லி
ஒருவராவது அழையுங்கள்;

நான் பிறந்த போது ஒரு பெயர்
என் பிழைப்பால் ஒரு பெயர்
-பிச்சைக்காரன்;

எழுதியவர் : priyan (17-Aug-13, 3:17 am)
பார்வை : 139

மேலே