காவடிச்சிந்து

———————— "காவடிச்சிந்து" ————————

அரைபுத்தி கொண்டோரே கேளுங்கள் - உங்கள்
குறைதீர்த்திட வந்திட்டேன் வாருங்கள் - பெண்கள்
வானென்பதும் மண்ணென்பதும் பூவுலகின் உயிரென்பதும்
உணருங்கள் - பின்பதில்
கூறுங்கள்.

மங்கைதான் மண்ணுலகின் சிறப்பு - அவள்
கங்கைதா னவர்க்கில்லை இறப்பு - வீணில்
பழிபேசிடும் இழிபேசிடும் கொடுங்கயவர்க் குரைத்திடு
மறுப்பு - அது உன்
பொறுப்பு.

தீராப் பிணிகொண்டு பிறப்பளித்து - பின்
ஈந்திடுவாள் இதழ் விரித்து - தன்
குணங்கலந்து மணங்கலந்து குருதிதனை தாய்ப்பாலென
உரித்து. - அதை
விடுத்து,

வீட்டுவேலைக் காரியென எண்ணுவார் - வெறுங்
காட்சிப்பொருள் தானென சொல்லுவார் - உண்மை
உணராமலு மறியாமலுந் தெரியாமலும் புரியாமலும்
எள்ளுவார் - நகை
கொள்ளுவார்.

கன்னியின் கண்தனைப் பாரடா - கண்டு
கள்ளமே தனவிங்கு கூறடா - விட்டு
பின்பார்த்துபின் முன்பார்த்துதன் பசியாறிட வருங்காமமும்
ஏனடா - மட
மானுடா.

இயன்றதை விளம்பிட்டேன் தன்னே - இன்னும்
திருந்தாதோர் பலருண்டு கண்ணே - அந்த
கயவர்தம் பலிவாங்குமுன் வெறிகொண்டிடு உயிர்வாங்கிடு
முன்னே - வீரத்தமிழ்ப்
பெண்ணே.

பி.கு: இந்தக்கவிதை, டில்லியிலும், மும்பையிலும் , இந்தக் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் பல நகரங்களில், சொல்லணாத்துயர் கொண்டிருக்கும் என் சகோதரியருக்கு சமர்ப்பணம்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (24-Aug-13, 2:21 pm)
பார்வை : 330

மேலே