[485] கருத்தினுள் பூத்த கவிதைகள்..(6)

136183-சிந்தாவின் கவிதைக்குக் கருத்தாக

கருப்பு நிறத்திலோர் தீவு! -இது
கண்ணைக் கசக்குதடி!
கறுத்த நெஞ்சிலோர் ஈட்டி -வெள்ளைக்
கரங்கள் கொடுத்ததடி!
விருப்பு பணத்திலே வைத்து-நாடு
வீழ்ந்து கிடக்குதடி!
வெறுப்பும் வந்துநம் மேலே- காரி
வீசி அடிக்குதடி!
பொறுப்பு கொண்ட நம் சிந்தா -புகழ்
புவியில் நிலைக்குதடி!
----

135011-தமிழின் தோழியின் கவிதைக்குக் கருத்தாக

அன்றே இறந்துவிட்டேன் நான்!
ஆனாலும் உலவுகிறேன் ஏன்?

சிதைந்த உடல்களும்
சிந்திய குருதியும்
புதைந்த உறவுகளும்
புழுத்த அங்கங்களும்
உழுத்த சட்டங்களும்
உணர்வற்ற அரசும்
கனலாய்ப் போன காற்றும்
கருகிப் போன இயற்கையும்
நுணலாய்க் கத்தும் நண்பர்களும்
நூலாய்ப் போன உதவிகளும்
கானலாய்ப் போன ஆசைகளும்
கனவாய்ப் போன வாழ்க்கையும்
பறைசாற்றுகின்றன எங்கும்
அன்றே நான் இறந்துவிட்டேன் என்று
ஆனாலும் உலவுகின்றேன்
ஆவிபோல்!
======
135955-K.S.கலையின் பாடலுக்குக் கருத்தாக...

சிவந்த வானுமே
விடியலின் முன்னே
சிரிக்க மயங்காதே தோழா! -அது
தவழ்ந்து வீழுமத்
தணலின் முன்னுமே
தன்னைக் காட்டுமே தோழா!

புரட்சி என்பதை
ஆயு தத்தினால்
புரிய வைக்கவோ தோழா!--அது
புயலின் நாசமாய்ப்
புரட்டிப் போனபின்
புலம்பி ஆகுமோ தோழா?

=================

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (31-Aug-13, 9:20 pm)
பார்வை : 94

மேலே