@@@அந்தக்கால மங்கை இவள் @@@

இரவென்னும் இனியவேளை
இதமாக மறைய இனிய -காலையை
வரவேற்க அழகாய் மலரும்
விடியற்காலை துயில் கலைத்து

சில்லென்ற காற்றினூடே
சிட்டாக எழுந்துவிட்டு -பாவை
பசுவையும் தொழுதுவிட்டு
பசுமையாய் சாணம் மொழுகி

பருத்தியின் வெண்மையெடுத்து
பலவண்ண வானவில்லின் -நிறத்தை
வார்த்தெடுத்து வரைந்திடுவாள்
வண்ணமிகு கோலம்தனை

முற்றம் பெருக்கி முறையாய்
முழுதும் அலசி முடித்திடுவாள் -பாங்காய்
கோமாதாவின் பால்கறந்து
கோல் கொண்டு அடுப்புமூட்ட

கரைந்திடும் காகமும்
கூவிடும் சேவலும் - பளபளவென
வெளுத்திடும் செவ்வானமும்
வெள்ளனையாய் வெந்நீர்

கருப்பட்டியோடு காப்பியும்
கச்சிதமாய் தந்திடுவாள் -அன்பாக
வீட்டினை எழுப்பிவிட்டு
விறுவிறுப்பாய் அடுத்த வேலை

அம்மிக்கும் ஆட்டுக்கல்லுக்கும்
அடுப்படிக்குமாய் அலைமோதி -அவள்
ஆக்கிடுவாள் கூட்டும் குழம்பும்
ஆற்றிடுவாள் அனைவர் பசியும்

தாயையும் தந்தையையும்
தயாராக கழனிக்கு-அனுப்பிவிட்டு
தமையனை தங்கையை
தரமாக பள்ளிக்கு கிளப்பிவிட்டு

மறுபணிக்கு மங்கையிவள்
மனம்கோணாமல் மறுபடியும்
ஏழு மணி அலாரத்தின் - சத்தத்தில்
எழுந்து எட்டுமணியென

மாற்றி தூங்கும் இந்தகால
மங்கைக்கு வியப்பாகத்தான் -தோன்றும்
ஆர்பாட்டம் இல்லாதவளாய்
அந்தக்கால மங்கை இவள்

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (1-Sep-13, 12:57 pm)
பார்வை : 259

மேலே