அவர்கள் கனவிலும் வருவேனோ..?

சின்னஞ் சிறுவனாய்
இளமைப் பருவத்தில்
என்னுடன் விளையாடிய
தோழர்களை, தோழிகளை
உறக்கத்தில், கனவில்
நான் காண்கிறேன்!

புவனா என் கனவில்
புன்னகையுடன் வருகிறாள்!
நீள் வட்ட முகத்துடன்
நிழலாகத் தெரிகிறாள்!
அழுந்த வாரிய பின்னலுடன்
அழகாக ஓடி ஆடி வருகிறாள்!

பக்கத்து வீட்டு பாலா
பதுங்கிப் பதுங்கி வருகிறாள்!
புத்தம் புது ஆடை உடுத்தி
புன்னகை மாறாமல் வருகிறாள்!
சண்டை யேதும் செய்யாமல்
சாதுர்யமாய் விளையாடுகிறாள்!

முன் கட்டு வீட்டிலுள்ள
முரட்டுப் பையன் மோகன் அவன்!
(மு)மிட்டாய் தரவில்லை என்று
முறுக்காய் என்னிடம் பேச மாட்டான்!
பனியாரமும் பம்பரமும் வாங்கித் தந்து
பல நேரம் உடன்பாடு செய்து கொள்வேன்!

காலங்கள் மாறினாலும் அவர்கள்
முகத் தோற்றத்தில் மாற்றமில்லை!
முதுமையும் முகத் தோற்றமும்
மாறியதை யாரறிவார்! - குழந்தையாகவே
நேற்றிரவுக் கனவினிலும் என் முன்னே
புவனாவும் பாலாவும் மோகனும் வரக் கண்டேன்!

அவர்களுக்கும், குழந்தையாக நான்
நொண்டியடித்து, குதித்துக் குதித்து
கும்மாளமிட்டபடி பின்னே வந்து
பின்னலைப் பிடித்து இழுப்பேனோ!
அழச் செய்து ஆனந்தம் கொள்வேனோ!
அவர்கள் கனவிலும் வருவேனோ நான்?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-13, 8:58 am)
பார்வை : 134

மேலே