நானும் நீயும்

நிலவு ஒழுகும் இரவு
நட்சத்திரப் பூ
இரைதேடும் பறவை
மயான அமைதி
ரசித்திட நான்
ரசனைக்கு நீ

ஓலை உடுத்தி
வைக்கோல் போர்த்திய
மண்வீடு
ஓரறைக்குள் மண்பாண்ட சமயல்
கூடவே உறக்கம்
மூங்கில் யன்னல்
சுமந்துவரும் மெல்லிய
குளிர்காற்று
ரசிக்க நான்
ரசனைக்கு நீ

தூவானம் அடிக்கும்
தாழ்வாரம்
ஆவிபறக்கும் தேநீரோடு நீ
ஓலைப்பாயில்-உன் இதழ்
பார்த்தபடி
எதை முதலில் ருசிப்பதென்று
நான்

முகம் கழுவிய மரங்கள்
குளித்த புல்வெளிகள்
கலைந்த போர்வைக்குள்
அழைக்கும் உறக்கம்
அலைக்கழிக்கும் உன் உருவம்
ரசிக்க நான்
ரசனைக்கு நீ

பவுர்ணமி நிலவு
திசை தெரியாக் காடு
ஒற்றையடிப் பாதை
கண்ணில் குடிகொண்ட பயத்தோடு
காதல் மொழி பேசும் நீ
கண்டுகொள்ளாமல் உன்னையே
ரசித்திடும் -நான்

அல்லிச் சோறு
அருகம்புல் சாறு
உப்புத் தெளித்த இலை
ஓறிறு மிளகாய்
சிறு வெங்காயம்
பசியில் நான்
பரிமாறும் நீ

சிறிய துலா
ஓறிறு கமுகு
கர்ப்பினி வாழை
கவிழும் கரும்பு
பொய்கையில் தாமரை
பறித்தபடி-அன்னத்தோடு
அன்றாடக் கதை பேசும் நீ
ரசிக்கும் நான்.

என்றும் வேண்டுமடி.

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (4-Sep-13, 2:56 pm)
Tanglish : naanum neeyum
பார்வை : 108

மேலே