பிரிவு உபச்சாரக் கவிதை (29.08.2013)
மழலைக் குருவிகளுக்கு
மடிமீது சோறு ஊட்டி
மாசில்லாதது இப்பெண் இனம் என
மனம் அறிந்து பேச வைத்தாய்
"அம்மா"வின் அரியணையில்
அளவறிந்து அங்கன்வாடி
அமைப்பாளராய் பணிப்புரிந்தாய்
கொண்டப் பணியைக்
குறையில்லாமல் கண்காணித்து
இந்த மழலைக்
குருவிகளுக்கு - தாய்க்
குருவியாய் தலைமை ஏற்றாய்
நீ
ஊட்டிவிட்ட உணவில் தாய்மையின்
உணர்வையும் கலந்து
ஊட்டி வளர்த்தாய்
அன்று கால்பதிந்து இங்கு
அடியெடுத்து வைத்து
அரசுப் பணியை ஏற்றாய்
நேற்று வரை உன்
நிழலில் இந்த மழலைக் குருவிகள்
உழன்று விளையாடி தவழ்ந்தது
இன்று - வயது மூப்பு
ஓய்வில் செல்லும்
ஒய்யாரத் தாய்க் குருவியே
நாளைமுதல் உன்னையே
நம்பியுள்ள உன்வீட்டுக்
குருவிகளுக்கு
உன்னதத் தாய்மைக் குருவியாய்
சிறகடிக்கப் போகின்றாய்
"ஓய்வு" - என்பது
உடலுழைப்புக்குத்தான்
உணர்வுகளுக்கல்ல
ஓய்வறியா உணர்வு
உன்னிடம் உள்ளதை
உணர்ந்தவள் நான் என்பேன்
"பிரிவு" - அரசுப்
பணியில் இருந்துதானே
நம்மிடம் இல்லையே
எத்தனை முறை
பூக்களைப் பறித்தாலும்
அத்தனை முறையிலும்
பூக்கள் மலரும்
அதுபோல் - இந்த
அரசுத் தோட்டத்தில் நீ பூத்தாய்
இன்று ஓய்வால் நீ பறிக்கப்பட்டாய்
என்றாலும் வாடாத பூ "நீ" என்பேன்
வயது உயர்ந்தப் பூவே
உன்னை வாழ்த்த எனக்கு வயதில்லை
வணங்குகிறேன் - வளம் பலம்
வாழ்வில் பெற - தேவன் திருச்சபையில்
உன் தேவைகள் ஈடேறும் என
நெஞ்சார பிரார்த்திக்கின்றேன்
நிறைவாய் செல்லம்மா
நிம்மதியாய் வாழம்மா
(இந்த கவிதை 29.08.2013 அன்று என் மனைவி மூலம் அரங்கேற்றப்பட்டது )