மரங்களின்றி மனிதனில்லை!
மண்தோன்றிய காலத்தே
மரங்கள் தோன்றி
மனிதனை வாழச்செய்தது!
தாய் பிள்ளைக்கு
பாலூட்டி வளர்ப்பதுபோல்
மனிதனை வளர்த்தது!
காய் கொடுத்து
கனி கொடுத்து
உறைவிடமும் கொடுத்தது!
மனிதன் சுவாசிக்க
தன் மூச்சுக்காற்றையே
தானமாகக் கொடுத்தது!
மனிதனுக்காக மனமிறங்கி
மழைபொழியச் செய்து
மனிதஉயிர் காத்தது!
மண்ணரிப்பைத் தடுத்து
மண்வளம் காக்க
வேரைத் தானமளித்தது!
மனிதன் மாமிசமுண்ண
இலைகளை விலங்குகளுக்கு
உணவாய்த் தந்தது!
மனிதன் வீடுகட்ட
தன் உடலையே
சமர்ப்பணம் செய்தது!
வளிமண்டத்தில் உள்ள
கரியமில வாயுவை
காணாமல் செய்கிறது!
கடலில் மீன்பிடிப்போர்க்கு
கட்டுமரமாய் மாறி
உதவி புரிந்தது!
வயல் வெளியில்
நீர் இறைக்க
ஏற்றமாய் மாறியது!
இவ்வளவு செய்தும்
மனிதன்காட்டும் நன்றி
மரங்களை அழிக்கிறான்!