"ஐநூறு ருபாய் நோட்டு"

பொண்ணு கேட்ட புஸ்தகம்,
பொண்டாட்டி கேட்ட பொன்னிசோறு,
பூட்டு கேட்ட வீட்டுகதவு,
ஓடு கேட்ட ஓட்டைக்கூரை,
அத்தனையும் உன்னாலே,
அழுத்தி வெச்சேன் பைக்குள்ளே.

ஒருக்கா உன்ன மோந்துகிட்டேன்,
ஓரஞ்சாரம் பாத்துகிட்டே.
ஒத்தக்கையால கஞ்சி குடிச்சேன்,
வெஞ்ஞனமா உன்ன தொட்டுகிட்டே.

சுருக்கா சோலிய முடிச்சிபுட்டு,
விருக்கா போனேன் கடதெருவுக்கு,
இருக்கா ன்னுஇன்னும் தடவிக்கிட்டு,
எதயத்தோட உன்ன அணச்சிகிட்டு.

கவருமெண்டு ஆபீஸ் தாண்டயில,
கைகலப்பு ஒண்ணு தொடங்கிருச்சி,
சண்டைய விலக்கிட்டு பாக்கயில,
சட்டப்பையி கிழிஞ்சிருச்சி!

அஞ்சி நாளு உழைச்ச காசு,
அய்யய்யோ தொலைஞ்சிருச்சே!
அடிமாடா சேத்த காசு,
அய்யய்யோ தொலைஞ்சிருச்சே!
ஆசமவ "ஐசு" பேரை,
எழுதுன காசு தொலைஞ்சிருச்சே!

-----------------------------------------------------
அயோக்கியன் கேட்ட விலை,
அரசு ஊழியன் கேட்ட விலை,
அப்பன் சாவு சான்றிதழுக்கு,
அற்பனவன் கேட்ட விலை,
ஆத்திரமூட்டிய அதே விலை,
"ஐசு"பேர் தாங்கிய விலை.

உதட்டோரம் ரத்தம் துடைத்து,
உதறி சட்டையை நீவிமுடித்தேன்.
கைமடிப்பில் ஒளிந்து இருந்தாய்-யாரையோ
கைவிட்டு சிரித்து இருந்தாய்.

லஞ்சமாக மாற்றிடலாமா?-இல்லை.
உரியவன் கையில் சேர்த்திடலாமா?
வேலைக்கு விண்ணப்பம் வாங்கிடலாமா?
நாளைக்கு சோற்றுக்கு வைத்திடலாமா?

உன்னை பார்த்த மயக்கத்தில்,
அன்னை தனிமை மறந்துவிட்டேன்.
வீட்டிற்கு பேருந்து, நிறுத்தத்தில்.
விரைவாய் சென்று தொங்கிவிட்டேன்.

வியர்வைக்கையில் கம்பி வழுக்க,
நீயிருக்கும் கையை துணைக்கு இழுக்க,
கம்பியா? நீயா? கேள்வி துளைக்க,
காற்றில் வந்த பணமே - உன்னை
காற்றிலேயே பறக்க விட்டேன்.

------------------------------------------------------------------------

காமுகர்களின் கைபட்டு,
கசங்க வேண்டிய தில்லை இன்று,
காற்றில் வந்த பணமே உன்னால்,
கடகட வண்டியில்,
பிரயாணம் என்று.

அம்மாவிடம் கொடுத்து வைத்தால்,
ஐம்பதாவது பவுனுக்கு சேமிப்பாள்.
ஆறைந்து கடந்த பெண்ணுக்கின்று,
ஐம்பது கூட பத்தாதென்பாள்.

"ஐசு" என்று பெயரிட்டதால்,
குளிர்ச்சி தருமென நினைத்திருந்தேன்.
இனாமாய் வந்த பணமென்பதால்,
இதுவும் வரதட்சணைதான், புரிந்துகொண்டேன்.

இந்தப் பணத்தினால் வரும்
இலவச சொகுசுப் பயணம் தேவையில்லை.
சொந்தப் பணத்தினால் வரும்
இடிகள் தாங்கலாம், பயமில்லை.

உரியவனிடமே போய்ச்சேர் பணமே.
உழைத்தவன் வருவான்,
பொறுத்திரு பணமே.
தொலைந்த இடம் இதுதானே,
இங்கேயே கிட பணமே.

------------------------------------------------------------------

அப்பாஅப்பா, இத கேளுங்கப்பா,
அதுல "ஐசு"ன்னு போட்டிருந்துச்சுப்பா,
அக்கா ஒருத்தவங்க கீழ போட்டாங்கப்பா,
அப்படியே பஸ்ல போயிட்டாங்கப்பா,
அங்க யாரும் இத பாக்கலப்பா.

அம்மாட்ட கொடுக்கலாம்னு வச்சிருந்தேனா,
அப்பா ஆபீஸ் பக்கம் வந்தேனா,
அங்க அழுக்குச் சட்டை போட்ட,
அங்கிள் ஒருத்தரு, அழுதிட்டு இருந்தாரு.

ஏன் அழுகுறீங்கன்னு கேட்டேனா,
என் பணத்தை காணம்னாரு,
என்ன அடையாளம்னு கேட்டேனா,
என் மக பேரு இருக்கும்னாரு.

இதுதானானு காட்டினேனா
இறுக்க கட்டி பிடிச்சிகிட்டாரு,
இறைவனே நீதான்னு சொன்னாரு,
இறைவன்னா என்னப்பா?

அவருகிட்டயே கொடுத்திட்டேன்பா,
அவரு உழைச்ச காசு தானப்பா,
அவர் காசு நமக்கு எதுக்குப்பா,
நான் நல்ல பொண்ணுதானப்பா,
எனக்கு ஒரு சர்ட்டிபிகேட் கொடுங்கப்பா..

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (14-Sep-13, 11:02 pm)
பார்வை : 120

மேலே