[509] இதுபோல் இல்லை இரவுகள்..

எனக்காகவா அழுதது
இந்த இரவு
ஊரெல்லாம் கண்ணீர்த்துளி!

கண் நிறையக் கொள்முதல்தான்
கை நிறைய அறுவடைதான் இல்லையே
கனவுகள்.

காற்றடித்தும்
கருகியது மொட்டு
ஊற்றியது பனியை ஊர்
அலர்!

ஊருக்குத் தெரியாது என்
ஒற்றைக்கால் தவம்
வேருக்குள் வெந்நீர்
அலர்!

சமைத்தது காலம்
படைத்தது பருவம்
தூக்கலான ருசிதான்
துடிப்பதோ
இளமனங்கள்!

கூடும்போது இருவர்
வாடும்போது நான் மட்டும்!
கழித்த இரவோ இருவருக்கும்
கரையும் கண்களோ
எனக்கு மட்டும்!
பெருக்கினோம் இன்பம் இருவருமே!
உருக்கிய பொன்னாய்
நான் மட்டும்!

கண்முன் பொருளாய்,
கைகளின் அருளாய்க்
காட்சி தந்தவர்
கண்ணுள் மணலாய்க்
கரிப்பதேன் பொருளால்!

குடித்தது இருவருமே
மயக்கம் எனக்கு மட்டும்
மசக்கையாய்!

இந்தக் கண்கள்
இருந்தாலும் மிக மோசம்!
வசித்தது அவருடன்
விசிப்பது என்னுடன்!

இரவுகள் என்றும்
இதுபோல் இல்லை
உறவு வந்தாலே
உறக்கமும் தொல்லை!
---- -----

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (17-Sep-13, 6:29 pm)
பார்வை : 109

மேலே