அட முட்டாள் தமிழா!!! விளங்கிக் கொண்டால் விரைவில் மெய் விடுதலை !!!!
தேசம் பொட்டிழந்து நிற்கிறதே
மாங்கல்யம் காத்தவர்கள் எங்கே?
வீடுகள் ஒளியின்றிக் கிடக்கிறதே
வெளிச்சம் பலநாளாய் வேலை நிறுத்தம் ?
சாவுகள் எமக்குள்ளே தொடரும் போதும்
எமக்குள்ளிருந்த
ஆறுதல் வார்த்தைகளும்
இல்லாமல் போய்விட்டதா?
முகாம்களிலிருந்து மீள் குடியேற்றம்
முள்வேலி விட்டு வந்து
அவரவர் வீட்டு வேலிக்கு சண்டை?
உடைந்த கடைகளுக்கு ஒப்பந்தம்
ஓடுகள் புதிது போட்டு,
உயர் சுவை உணவகங்கள்,
பெண் தசை பகிர்வகங்கள்
இது தான்
வசந்தமா?
நீ ஆசைப்பட்ட விடுதலை இதுவோ
முதலில் உன் அச்சம் விலக்கு.
தொடர் நாடகம்,
வேற்று மொழி களியாட்டம்,
பள்ளிக்கூடத்திலும்
புகை விடும் அழுக்கு மாணவர்கள்,
எவர் கை பார்த்தாலும்
ஏதேதோ வேலைக்காய் கைபேசி,
அட முட்டாள் தமிழா!
படுத்த படி கொட்டாவி விடாதே
இது தான் விடுதலையென !
செத்துவிடுவாய் உன் இந்த கனவுச்
சுதந்திரத்துக்கு !
உனக்கு தெரியாமலே உன் வீடு
எரிக்கபடுகிறது,
உனக்கு தெரியாமலே உன் சுவாசம்
பறிக்கபடுகிறது!
பெரும்
சுவை கொண்ட தேனுக்காய்
நீண்ட இடர்வழியில் திரண்ட பெருமலையில்
நாம் திடமாய் நடந்து போன
இலக்கை சேர முன்,
அடித்து ஓடும் அழுக்கு தண்ணியை
தேன் என பருகுவதா?
நடக்க பயந்து இதை நீ குடித்து
படுக்கையில் கிடந்து சாவதா?
இதைப் பார்த்தும் திருந்தாமல் போனால்
இழி நிலை ஆகும் உன் குடி!
விரைவில் குத்து விளக்கு எரியும்
உன் தலை அடி !
அழிப்பவன்
இப்போதுமெம்மை
அழித்தபடியாய்த்தானுள்ளான்,
அறிந்து கொண்டால்
ஆண்டு கொள்ளலாம்,
உன்னை நீயே
எம்மை நாமே !
கையில் கைபேசி
பள்ளிக்கூடத்தில் சிகரெட்
கோவிலில் விபச்சாரம்
பேருந்தில் சில்மிஷம்
வீட்டுக்குள் கொள்ளை
தெருவில் கற்பழிப்பு.
அட தமிழா !
ஆறாய்யோடிய குருதி நதிக்கு
இப்படியழிந்து போகவா நாம் உயிர் கொடுத்தோம் !
பாரையாண்ட எம்மினம் பலமிழந்து போனதுவாய்
பகையைப் போல நீயுமா நம்பவேணும் !
அவன்
பகலில் காணும் கனவு பறவைக்கு
உன்னை இரையாக்குகிறான்.
ஒன்றை தெரிந்து கொள்
பிறந்த நாட்டில் வாழ அனுமதி எடுப்பதிலும்
சாகுதலே சாலச் சிறந்தது .!
ஏனிந்த சீரழிவு
ஏனிந்த தெளிவின்மை
பாய்விரித்தால் பகை தின்னும் இன்னும்
பாய்ந்து கொண்டால் . . . ?
நீயே எண்ணு!
விளங்கிக் கொண்டால் விரைவில் மெய் விடுதலை !