"ஷெல்லடித்த வீடு"

சுண்ணாம்புக் காரை வீடு,
சுகஞ்சுகமா வாழ்ந்த வீடு,
சுண்டாட்டம் வளந்த வீடு,
சூனியமா இப்ப ஆன வீடு.

அண்டைக்கு ஒசந்த வீடே,
அம்மாகட்டி ஆண்ட வீடே,
அம்மணமாயி நிக்கறியே-எங்கள
அகதியாக்கி நிக்கறியே.

சாஞ்சிநட பழகின சுவரு,
ஓவியம்பல கீறின சுவரு,
ஓட்டயாகி நிக்குதப்பே - பெரும்
ஓலச் சத்தமா கேக்குதப்பே.

திண்ணையிலை ஆச்சி வாசம்,
குசினியிலை அம்மா வாசம்,
உதிர்ந்த உத்திரம் காணயிலை
தூளிலை தூங்கின தங்கை வாசம்.

நாசிநிரய நோந்த வீட்டில்,
வீசுதிப்ப ஷெல்லு வாசம்.
நாபொறந்து வாழ்ந்த வீடு,
நாதியிலாமே போன நாசம்.

அயலட்டை பொடிச்சி களோடை
ஆடிப் பாடின கோடி யில்லே,
பொம்மர் வருஞ் சத்தங்கேட்டு
பாஞ்சி ஒளிஞ்ச பங்கரில்லே.

இயக்கஞ் சேந்த சீனியப்பு
இறுதியா திண்ட மேசையில்லே,
இதயங் கிடந்து கதறுதுங்கோ,
இது எங்கட வீடுமில்லே.

ஒடிஞ்ச கிடுகு வேலிக்குள்ரை
ஓடிப்போன அக்கை நாபகம்,
சரிஞ்ச பலகை பரணுக்குள்ரை
ஒளிஞ்ச கள்ளன்-பொலிஸ் நாபகம்,

முறிஞ்சு விழுந்த தூணில்கட்டி
அப்பு அடிச்ச அடிகள் நாபகம்,
கிழிஞ்சு மனசு குமுறுதுங்கோ
அழிஞ்ச வீட்டில் அத்தன நாபகம்.

ஊரெல்லாம் போர் சூழ
உறைந்து பார்த்த யன்னல் எங்கை?
முதல் தோட்டா சீறிப்பாய்ந்து
ஓட்டையிட்ட கதவு எங்கை?

குண்டு விழுந்து சிதறிய அம்மாவின்
கையெங்கை….. காலெங்கை…..
பாலூட்டிய மாரெங்கை….. எண்டு…..
.
.
.
அய்யோ……...
தேம்பித் தேடிய கூடம் எங்கை?

றத்தத்தோட கலந்த வீடே,- அம்மா
றத்தத்தாலே குளிச்ச வீடே.,
வம்சவம்சமா வாழ்ந்த வீடே,
வாஞ்சையா எங்களை வளத்த வீடே,
சிரிச்சி இருந்து சின்ன வீடே,
சிதஞ்சி போன சித்திர வீடே,

விட்டுட்டு போனோமே - சீவன்
அத்துட்டு போனோமே.
வீடு, வெறும் வீடில்லேங்கோ..
கூடு, எங்கட உசுர்கூடுங்கோ.,,,,

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (29-Sep-13, 6:45 am)
பார்வை : 84

மேலே