சிறுவர் தினத்தில் நம் சிறுமை தனை மாற்றிடுவோம் !
குழல் இனிது யாழ் இனிது என்பர்
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்
குறளிலே நாம் படித்துள்ளோம்
குடும்பத்தில் மட்டும் தன் குழந்தையா ?
சிறுவர் தினம் என்று ஒரு
சிறந்த நாளை கொண்டாடி விட்டு
சிற்றின்பம் காண்பதற்கு ஒரு
சிறுமியை அழைத்தல் நன்றாகுமோ?
படிப்பது தேவாரம்
படித்து விட்டு
இடிப்பது சிவன் கோவில்
துடிக்கின்றது என் இதயம்!
தொழிற்சாலை ஒன்று வைத்து
தொண்ணூறு கோடி கண்டு விட்டு
தொலைவில் உள்ள தன் மகனுக்கு
தொங்கு தோட்டத்தில் பிறந்த நாளாம்!
தன் விருத்திக்காக வியாபாரத்தில்
தணலிடை மெழுகாய் உருகும்
தன் பெறா மக்கள் கூட்டமதை
தன்மையாக நடத்துவாரோ?
பெற்ற தாயை விட்டு ஒரு
பெண் சிசுவை கடத்தி வந்து
பெரிய கண்கள் பிடுங்கி விட்டு
பெருந்தெருவில் இரக்க விடுவர்!
புத்தகம் சுமந்து கொண்டு
பத்தாம் ஆண்டில் படிக்கையிலே
பித்தாக்கி மானம் பறித்து
சொத்தாக பிரசவம் தருவர்!
சமுதாய பிரமுகர் பிள்ளையென்ற
சம்பாசணை இருந்தால் போதும்
சட்டென்று கடத்தி வந்து
சட்டம் மீறி மிரட்டுகின்றார்!
பிரத்தியேக வகுப்பு சென்று
பிழைக்கின்ற வழியில் காம
பித்தர்கள் இரு பாலரையும் கொண்டு வந்து
பிய்க்கின்றார் அவர் மானம்!
எதுவும் வேண்டாம் போகட்டும்
எங்கள் வீட்டில் இருந்திடுவோம்
என்று ஒரு முடிவு எடுத்தால்
எவனோ சொந்தக்காரன் மானம் பறித்து சென்றிடுவான்!
குடி குடியை கெடுக்குமென்று
குலமக்கள் கூறிட்டாலும்
குடித்துவிட்டு வந்து தனது
குழந்தைகளை அடிக்கின்றார்!
விவாகரத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வித்தை காட்டும் கைப்பேசி
விவேகம் கூடும் இணையத்தளமும்
வித்திடும் தீய வழிக்கு!
இத்தனை சிரமங்கள் இருக்கையிலே
இன்றைய நாளில் வாழ்த்தி விட்டு
இனிப்புக்கள் தந்து ஒரு
இனிய விழாவாக்குவதால் பலன் உண்டோ?
அது அனைத்தும் விட்டு
அவர்களுக்கு என்று ஒரு
அமைதியான உலகம் தந்து
அவர் சூழல் மாற்றிடுங்கள்!
மனதினால் அவர்கள் படும்
மட்டற்ற துன்பம் நீக்கி
மனதார மகிழ்ந்திடுங்கள்
மலடர் குழாம் குறைந்துவிடும்!
இன்றைய நாளில் ஒரு
இனிய சபதம் எடுத்துடுவீர்
இவ்வுலகில் அநாதை என்று
இருக்கின்ற இனம் அழித்திடுவீர்!
பட்டாம் பூச்சிகளாய் வானில்
பறந்திட விரும்பும் அவர்களை
பண்போடு வளர்த்து நல்ல
பருவ மக்கள் ஆக்கிடுவோம்!
இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்...!