நல்வாழ்க்கை ரகசியம்
மனித வாழ்க்கை
இன்பமும் துன்பமும்
மாறி மாறி முகங்காட்டும்
புதிர்க் கண்ணாடி.
மகிழ்வும் சோகமும்
சுகமும் துக்கமுமாய்
ஏதோ ஒரு உணர்ச்சியிலே
எப்பொழுதும் பயணம்.
தேங்கிய நீராய் அன்றி
தெறித்தோடும் ஆறாய்
பலர் வாழ்வும் இன்று
பாழாய்ப் போகிறது.
அமைதியாய் ஓடும்
அழகு நதி போல
நம் வாழ்க்கை அமைதல்
நம் கையில் இருக்கிறது.
இது பற்றி நம் முன்னோர்
இயன்றதை உங்களுக்கு
எனக்குப் புரிந்தவரை
இங்கே உரைக்கின்றேன்.
உள்ளுணர்வுத் தூண்டுதலில்
வாழும் மிருகங்கள்.
உணர்ச்சித் தூண்டுதலில்
வாழுகிறோம் நாம்.
ஐம்புலன்கள் உலகுடனே
அயராது தொடர்புகொள்ள
ஆறாம்புல மனதினிலே
தோன்றுவது உணர்ச்சி.
தோன்றும் உணர்ச்சியினை
பிடித்தது பிடிக்காததென்று
மனது பிரித்தெடுக்க
மாட்டுகிறோம் வலையில்.
பிடித்ததை விரும்பவும்
பிடிக்காததை வெறுக்கவும்
ஆழ்மனதின் அடித்தளத்தில்
ஆழமாய்ப் பதிவு செய்து
விரும்புவதை அடையவும்
வெறுத்ததை விலக்கவுமே
மொத்த வாழ்க்கையையும்
மொத்தமாய் அடகு வைப்பு.
விரும்பியது கிட்டில்
அரும்பும் இன்பம்
வெறுப்பது சேருங்கால்
விளைவது துன்பம்
விரும்பியது விலகுங்கால்
ததும்பிடும் சோகம்
வெறுப்பது தொடர்பறுக்க
விரவிடும் நிம்மதி
இப்படியாய் எப்பொழுதும்
உணர்ச்சிகளின் தூண்டுதலில்
ஓயாமல் மனம் ஆடும்
உதைபந்து வாழ்க்கை.
இருப்பதெல்லாம் துறந்து
இருள்காடு சென்றாலும்
துரத்தி வரும் நம்மை
இன்பமும் துன்பமும்.
இருக்கும் இடத்திலேயே
இருக்கவேண்டும் நிம்மதியாய்
எப்பொழுதும் களிப்புடன்
என்பீர்களேயெனில்
உணர்ச்சிகள் தோன்றும்போது
உடனடியாய் உடன்படாதீர்
பிடிக்குது பிடிக்கவில்லையென
பிரிக்கும் வேலை செய்யாதீர்
இப்படியிருக்க பழகிவிட்டால்
தோன்றும் உணர்ச்சியாவும்
தப்பாமல் சிலநொடியில்
தங்காது மறைதல் காண்பீர்.
அறிவு தெளிவு பெறும்
ஆசைகள் அடங்கிப்போகும்
எதிர்கொள்ளும் எதையும்
எளிதாய் தாங்கும் மனம்
உணர்ச்சிகளின் பாரம் நீங்க
உள்ளமது மென்மையாகும்
மென்மை உள்ளமதில்
எவர்பாலும் அன்பு வரும்
எப்பொழுதும் அமைதியும்
எதிலும் நிறை கண்டு
அழகு நதியாய் ஆகிடும்
நம் வாழ்வு.
வாழப்பிறந்து விட்டோம்
முறையாய் வாழப் பழகிடுவோம்
தோழமையில் நான் பகிர்ந்தேன்
வாழ்க வளமுடனே.