சபதங்கள்
வனம் புகுந்ததொரு பேய்க்காற்று
தூங்கிய காட்டை தட்டியெழுப்பியது
கலங்கின கிளைகள்
பதறின இலைகள்
சுழற்றியடித்தது காற்று...
சாபங்கள் போட்டன மரங்கள்...
இலைகள் சேர்ந்து
சபதம் செய்தன...
இனிமேல் இல்லை உறவு...
இந்த கல்நெஞ்சுக் காற்றோடு என்று
விடியலில்...
கிளையில் துயின்ற இலையில் சில
மண்ணின் மடியில் வீழ்ந்து கிடந்தன...
விசும்பியது மரம்...
மேலிருந்து இலைகள்
சிந்தின கண்ணீர்...
துக்கம் விசாரிக்க
மீண்டும் வந்தது காற்று
மறுநாள் தென்றலாக...
மரத்தின் தலைகோதி
கிசுகிசுத்தது காற்று...
காற்றோடு பகைகொண்டு
நமக்கென்ன இலாபம் என்று
மீண்டும் மரங்கள் ஐக்கியமாக
கலகலத்துச் சலச்சலத்தன இலைகள்...
சபதங்கள் வெறும் வாய் வார்த்தைகள்...
தன்னை வருத்தாத எதைப் பற்றியும்
நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருப்பதில்லை
யாரும்...
தலைவலியும் காய்ச்சலும்
தனக்கு வந்தால் தெரியும்...
சபதங்கள் வெறும் வாய் வார்த்தைகள்...
சொல்லிச் சொல்லியே செத்துப் போயின...
உதிர்ந்து போன இலைகள்...