காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உம்மை ஒருவர்க்குப் பிடித்து உள்ளதா
உமக்குப் பிடித்த ஒருவரும் உளரா
அவரும் உம்மை விரும்புதல் உண்மையா
விரும்பும் மனதை அறிந்து இருப்பவரா
காதல் மனதில் கனிந்து இருப்பதை
பாதகம் இன்றி எடுத்து உரைத்திட
ஆயிரம் வழிகள் அகிலத்தில் உண்டு
ஆயினும் அதனைக் கூறுதல் நன்று!.
அருகில் இருந்து பேசிடும் சமயம்
உருவம் அதனை அணுகியே கொஞ்சமுன்
முகத்தை தலையை தொட்டுத் தடவி
சிகையைக் கோதிப் பார்த்தல் பயனே
புன்னகை தன்னை தவழ்ந்திட விட்டு
மென்னகை அவளுக்குப் புரிந்திடும் வகையில்
நல்ல நகைச்சுவை சிரிப்புகள் சொல்லிட
அல்லும் பகலும் யோசித்து வைத்திரு!!.
நண்பர்கள் சேர்ந்து அருந்தும் விருந்தில்
பண்பெனப் பட்டும் படாமலும் பாராமல்
கண்களை மட்டும் நேருக்கு நேராய்
கொண்டு பொருத்திப் பார்த்து சிரித்திடு
உனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த
உண்மைகள் கதைகள் நிகழ்வுகள் இருப்பின்
தனிப்பட்ட முறையில் பேசிடும் போதில்
நினைத்திட வைத்து மீண்டும் சிரிப்பீர்.!!!
நேருக்கு நேராய் உரையாடும் தருணம்
பேரினை கொஞ்சம் அழுத்திச் சொல்லிட
பேர்வழி மகிழ்ந்து கேட்டு ரசிப்பின்
நேர்வழி செய்திடும் உறுதியாய் காதலை
உள்ளம் உருகி உரைப்பது போலே
கள்ள மெருகினைக் குரலிலினிற் கூட்டிட
பள்ளத்தில் வீழு்மே எட்டாக் கனியது!!!!.
ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும்
கவ்விடும் வகையில் பரவசம் கொண்டு
மேனியில் மகிழ்ச்சி பொங்கி வருவதை
மேடை போட்டுக் காட்டிட வேண்டும்
அன்பரின் கையில் தாங்கிப் பிடித்த
கனரகப் பையோ குடையோ பர்சோ
கவனம் சிதறிப் போகா வகையில்
வாங்கி உதவிட வீங்கும் கரிசனம்!!!!!.
சென்ற முறை சந்தித்த வேளையில்
நன்றாய் ஞாபகம் கொண்டு அப்பேச்சில்
முன்னுக்குப் பின் முரண் ஏதுமின்றி
தன்னால் விளைந்த பயனைக் கூறலாம்
தவறாமல் அன்று சந்திப்பது என்றால்
கவர்ந்திடும் வகையினில் உடையினை அணிந்து
பெற்ற செய்திக்குப் பதிலொரு செய்தியை
பற்றிய தீயெனப் பரவிட அனுப்பிடு!!!!!!.
அவரது நட்பும் எதிரியும் கூட
தனக்கும் பிடித்த நட்பு எதிரியென
கண்படு விதத்தில் பிறந்த நாள் பரிசை
கொண்டாடி மகிழ உறவது வலுக்கும்
இத்தனை செய்தும் மசியலை ஆயின்
கத்து கடலி்ன் கரையினில் அமர்ந்து
பொத்தல் எங்கே உள்ளது என்பதை
அத்திவாரத்தில் இருந்து அகழ்ந்திடு!!!!!!!.