உயிர்பிரியும் நேரம்!
என்ன தம்பி, என்னாச்சுடா? அம்மா இதோடு ஆரேழுதடவை கேட்டுவிட்டார். " ஒன்னுமில்லமா, தலவலியா இருக்கு! சும்மா இரேன் "
என்ன ஆச்சு இவக்கு? ரெண்டுநாளா சரியில்லையே! அம்மா முனுமுனுத்தவாறே நகர்ந்தார். அன்று அவள் சொன்ன வார்த்தைகள் சேகரின் நெஞ்சை கிழித்துக்கொண்டிருந்தது. எதைப்பார்த்தாலுமே எரிச்சலாய் வந்தது. வேறு எதைப்பற்றியும் யோசிக்கவே முடியவில்லை "டேய்! வெறுப்பேத்தாத! நேர்லபாத்து சொல்றேன்"
செல்பேசியில் அழைத்த நண்பனிடம் எரிந்து விழுந்துகொண்டிருந்தான்.
" என்ன மாப்ள, கவிதா கைகழுவிட்டாலா? "
அலுவலகத்தில் நண்பன் வேறு தன்பங்கிற்கு, கடுப்பெற்றிக்கொண்டிருந்தான்.
அன்று முழுக்க வேலையில் கவனமேயில்லை.
எல்லா கவனமும் அவளை எப்படி பழிதீர்ப்பது என்றே இருந்ததால். "கவிதா" அவளேதான் இவன் இப்படி அல்லல் படுவதற்கெல்லாம் காரணம். அவள்தான் பேரழகியா என்ன? அப்படியென்ன ஊரிலில்லாதது அவளிடம் இருக்கிறது? இப்படி திமிராக திரிய?
அலுவலகத்தில் கணினிமுன் அமர்ந்தவனுக்கு, நினைவுகள் அன்று நடந்ததையே சுற்றிச்சுற்றி வந்தது. மூளை முடிச்சுக்குள் அந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்தது படம்போல் ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கு உன்ன புடிச்சிருக்கு, நீ என்ன "லவ்" பண்ணுவியா கவிதா! சேகர் கேட்டுவிட்டு, கையில் ஒற்றை ரோஜாவை எடுத்து நீட்டினான். கவிதா ஒருகணம் அதிர்ந்தாள். சிலமாதமே பழக்கமென்றாலும் கவிதாவிற்கு சேகரை பிடிக்காமலில்லை. ஆனால், காதலிக்குமளவுக்கு ஈர்ப்பில்லை. இப்படி திடீரென்று கேட்பானென்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நிதானமாகவே பதில் சொன்னாள்.
"சேகர் எனக்கு உன்ன மொதல்ல புடிக்கனும், அப்பறம் நம்ம ரெண்டுபேர் மனசும் ஒத்துப்போகனும், அதுக்கப்புறமாதான் காதல், கல்யாணமெல்லாம் புரிஞ்சிக்கோ!"
இதைக்கேட்ட சேகருக்கு, சுர்ரென்று கோபம் வந்தது. "அதெல்லாம் யோசிச்சிட்டேன்.
இப்போ புடிச்சிருக்காயில்லையா, என்ன "லவ்" பண்ணுவியா மாட்டியா? அதசொல்லு!"
நிலைகுலைந்தாள் கவிதா.
"என்னடா காட்டுமிராண்டியாட்டம் நடந்துகற, பொம்பலன்னா நீ இழுத்த இழுப்புக்கு வரனுமா? மொதல்ல நல்ல ஆம்பிளையா நடந்துகோ! நிலையா ஒருவேலைபாத்து நல்லபேரெடு, அதுக்கு லாயக்கில்ல! வந்துடான் லவ்வுன்னுகிட்டு!"
"ஏய்ய்ய்..." என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தான் சேகர்.
"சும்மா நிறுத்து! இந்த பூச்சாண்டியெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்கோ! முதல்ல நல்ல மனுசனா இருக்கப்பாரு!"
கவிதாவின் பதிலடி அவனை நிறுத்தியது. காலை தரையில் உதைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு வேகவேகமாக வெளியேறினான் சேகர்.
இது, அவன் மூளையில் நூறாவது முறையாக ஓடி, மண்டையை குடைந்துகொண்டே இருந்தது. மூன்று நாட்களாக அவனால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. காதில் எதுகேட்டாலும் அவளின் ஏளனப்பேச்சே எதிரொலிப்பதுபோல் தோன்றியது.
கவிதாவுக்கு இந்த அளவு கொழுப்பு இருக்ககூடாது. அதை எப்படி அடக்குவது, என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து கோவத்தினால் அவன் கண்கள் சிவந்தே இருந்தது. சனிக்கிழமை காலையிலேயே அவளின் தெருவுக்கு சென்றான். ஆனால், வீடு பூட்டியிருந்தது. "என்ன அலயவிட்டுட்டு எங்கடீ போய்தொலஞ்ச?"
புலம்பிக்கொண்டே திரும்பிவந்தான். இதோடு ஐந்தாவது தடவையாக அவளின் பூட்டிய வீட்டை பார்த்துவிட்டு வந்துவிட்டான். ஒவ்வொரு முறையும் அவனின் கோபம் அதிகமானதே தவிர குறைவதாக இல்லை. வேறு எதையும் யோசிக்ககூட முடியவில்லை. திங்களன்றும் கவிதாவை பார்க்க முடியவில்லை. வழக்கமாக நிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கு அவள் வரவில்லை. அவளின் அலுவலகம் சென்றுகூட விசாரித்துவிட்டான். இன்றைக்கு விடுப்பில் இருப்பதாக கூறினார்கள். அவளின் அலுவலகம் முன் கொஞ்ச நேரம் நிற்பதும், பேருந்து நிறுத்தத்தை சுற்றிவருவதும், அவளின் வீட்டிற்கு சென்றுபார்பதுமாக இரவுவரை அலைந்துகொண்டிருந்தான்.
நேரமாகஆக அவனுக்கு பித்துபிடித்ததுபோல் ஆனது. வழக்கமாக செல்லும் கடைக்கு சென்றான், எப்போதும் வாங்குவதைவிட இரண்டுமடங்கு அதிகமாக வாங்கினான். தன் வண்டியில் சாய்ந்து நின்றபடி, தலையில் தட்டி மூடியை சுழற்றி தூர வீசி எறிந்தான். அந்த அமிலபானத்தை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான். ஒன்றை குடித்து முடித்தவுடன் ஏதோ கொஞ்சம் ஆறுதல்போல இருந்தது. சிறிது நேரத்தில் மற்றொரு பாட்டிலையும் அதேபோல மடமடவென வாயில் கொட்டி முடித்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்ய ஆரம்பித்தது மது. ஏதேதோ நினைத்துக்கொண்டு தன் வண்டியை கிளப்பினான். சீரியபடி சாலையை அளந்துகொண்டு வண்டி சென்றது. சின்னப்பள்ளங்களில் தல்லாட்டத்தோடும், கொஞ்சம் இருட்டான இடங்களில் தடுமாறியபடியும், எங்கு செல்கிறோம் என்று அவனுக்கும் அவன் வண்டிக்கும் தெரியாமலேயே சென்றனர்.
போதை கொஞ்சம் கொஞ்சமாக உச்சியிலேற, வாகனம் நிதானமின்றி, வேகமுடன் ஆடியாடி சென்றுகொண்டிருந்தது. அந்த சரிவான வழியில் வண்டி திரும்பியது, வந்த வேகத்தை குறைக்க முயன்றும் முடியாமால் ஒருபெரிய அரைவட்டமாக திரும்பியது. எதிர்வரும் பாதையையொட்டி சென்றது. அந்த நேரத்தில் அலறிய செல்பேசியை, எடுத்து காதில்வைக்கப்பார்தான். ஆனால் அது, எகிறிவிழுந்து அக்கக்காக சிதறியது. அதைப்பார்த்த அவன் கையாட, வண்டியாடி சாலையின் இடைதடுப்பில்மோதி, எதிர்திசையில் சரிந்து விழுந்தது. நிலைகுலைந்த சேகர், புரண்டபடி குப்புரவிழ, மேட்டில் ஏறிக்கொண்டிருந்த பேருந்தின் பின்புற சக்கரம் அவன் தலையையும் கழுத்தையும் நசுக்கி தேத்துநின்றது. இரத்தம் சிதறிவிழும் முன்பாகவே, ஒரே நொடியில் உயிர்பிரிந்தது. அதே நேரம் செல்பேசியில் "தாங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் ....." என்ற கணினிக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது கவிதாவின் காதுகளில். அவன் நினைவின் இறுதி நொடியில், அம்மாவின் உருவம் நிழலாடியது. காலையில் அவர் சொன்ன வார்த்தைகள் இதயத்தில் ஓடியது. “அவசரப்படாம, நிதானமா இருப்பா! பார்த்து கவனமா போய்வாப்பா!”