ராமு ...

ராமு !
ஆம், இது அவன் பெயர்.
ராமு ஒரு ஏழைக் குடும்பத்தில் ஏழாவது குழந்தையாகப் பிறந்தவன். குடும்பத்தில் அவன் தான் கடைக்குட்டி.
ஏழையாகப் பிறப்பதில் எவ்வித குற்றமும் இல்லையே. ஆனால் அவன் ஒரு கோழையும் கூட.
கரப்பான் பூச்சியை கண்டு விட்டால் குய்யோ முறையோ என்று கூவி அருகில் இருப்பவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுவான்.
பல்லியைக் கண்து விட்டால் துள்ளி ஓடிவிடுவான்.
பாம்பைக் கண்டுவிட்டால் .. ஓஹோ .. கேட்கவே வேண்டாம். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்களே !, இந்த தொடை நடுங்கியைப் பற்றி சொல்லவா வேண்டும் ?
ராமு பயந்து ஓடத்தொடங்கி விட்டால் சிறுத்தை தோற்றுவிடும் போங்கள். இதனால் ராமுவின் வீட்டிலும் சரி அவன் குணம் தெரிந்த மற்றவர்களும் சரி ..
அவனை சிறுத்தை ராமு என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர்.
ராமு என்றுமே தனிமையை விரும்ப மாட்டான். காரணம் ... பயம் தான். அவன் ஏனைய சகோதர சகோதரிகளும் அவனை எப்பொழுதும் கேலி பேசுவார்கள். சில சமயம் வேண்டுமென்றே அவனைத் தனிமையில் விட்டு விடுவார்கள். உடனே, ஓ என்று அழுது விடுவான்.
வீட்டில் தான் இப்படி என்றால், பள்ளியிலும் நிலைமையில் மாற்றம் இல்லை. அவனுடன் படிக்கும் மாணவர்கள் அவனை வேண்டுமென்றே சீண்டுவார்கள். ஆனால், அவன் தமிழ் ஆசிரியருக்கு மட்டும் அவன் மீது சிறிது கருணை உண்டு. தைரியத்தை பற்றி அவனுக்கு உணர்த்த அவ்வப்போது ஒருசில கதைகளைக் கூறுவார். அவனும் அதைக் கேட்டு தலை ஆட்டுவான்.
ராமுவின் வீட்டிற்கு சற்று தொலைவில் ஒரு மலையில் ஒரு காடு இருந்தது அந்த ஊரில் இருந்தவர்கள் சிறுவர்கள் யாரும் மலைப்பக்கம் போகக்கூடாது என்பதற்காக அந்தக் காட்டில் வனவிலங்குகள் இருப்பதாகச் சொல்லி இருந்தனர். உண்மையில் வன விலங்குகள் இருந்தனவோ இல்லையோ இது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோரும் அறிந்தது என்ன .. வனவிலங்குகளின் தலைவன் சிங்கம் என்பது தானே ! ராமுவின் நண்பர்கள் சிலர் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். ராமுவையும் அவர்கள் அழைப்பர். ஆனால், அவன் ஒரேயடியாக வரமறுத்து விடுவான்.
இப்படி இருக்க, ஒருநாள் .... இப்படி இருக்க, ஒருநாள் ....விளையாடி கொண்டிருந்தவாறே தன்னை அறியாமல் ராமு காட்டுப் பகுதிக்குள் நுழைந்து விட்டான்.
மாலை நேரம். விண்ணைத் தொடும் அளவில் உயர்ந்து காணப்படும் மரங்களில் எத்தனையோ விதமான பறவைகள் இரவில் தஞ்சம் அடைய தன் சிறகுகளை விரித்து அசைத்து அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தன. கதிரவனின் கதிர்கள் மரத்தின் இலைகளின் இடைவெளியில் நுழைந்து சிதறி விழுந்தன. இந்தக் கண்கொள்ளாக் காட்சி அவனை வெகுவாக ஈர்த்தது. பறவைகள் செய்யும் பலவிதமான ஒலிகள் அவன் செவிகளில் விழ, அவன் மனதிற்குள் ஒருவித மகிழ்ச்சி நீரூற்று போல் தோன்றியது. மெய்மறந்து இயற்கையின் அந்த அற்புதக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்த அவ்வேளை அவன் காலில் ஏதோ ஏறிவிட்ட ஒரு உணர்வு தோன்றியது. சற்றும் நிலை குலையாமல் என்ன என்று பார்த்த பொழுது .. அன்னப்பறவை போல் வெள்ளை வெளேரென நிறத்தில் ஒரு முயல் குட்டி அவன் காலடியில் கண்டான். உடனே தன்னிரு கரங்களால் அதை எடுத்து கொண்டு விட்டான். இனியும் அங்கு இருப்பது சரியில்லை என்று உணர்ந்து, ஒரு வழியாக அங்கிருந்து வெளியேறி, கவலையுடன் நின்றுகொண்டிருந்த மற்ற நண்பர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான். ராமுவின் நண்பர்கள் அவனை தனிமையில் காட்டில் விட்டுவிட்டு வந்ததிற்கு மன்னிப்பு கோரினர்.

நீங்கள் அப்படிச் செய்திருக்கவில்லை என்றால் இந்த முயல் எனக்குக் கிடைத்திருக்குமா என்று ராமு பதிலளித்து விட்டு . முயலைக் கொஞ்சியவாரே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

இயற்கையில் வருவது பயம். அதை அந்த இயற்கையே மாற்றியது !!

எழுதியவர் : (21-Oct-13, 4:55 pm)
பார்வை : 129

மேலே