உண்டியல்-காணிக்கை-லஞ்சம்!-(அஹமது அலி)
எந்தச் சாமி
நம்மிடம் வந்து கேட்டது
உண்டியல் காணிக்கை!
(***)
நாம் போடுகிறோம்
நம்மைப் போல் ஒருவன் எடுக்கிறான்
இதில் சாமியின் பங்கென்ன?
(***)
கோயில், தர்கா வாசலில்
ஏழைகளுக்கு தர்மம் போட
மனம் வருவதில்லை!
(***)
உண்டியலில் அள்ளிப் போடுவோம்
உண்டு கொழுப்பது
பூசாரியும்,லெப்பையுமே...
(***)
ஏழைகளுக்கு கொடுப்பது
புண்ணியம்
ஏச்சுப் பிழைப்போர்க்கு கொடுப்பது
"புண்"ணியம்!
(***)
சோற்றுக்காக
சோம்பேறிகள் செய்து வைத்த
உண்டியலை நிரப்புவது
என்ன நியாயம்!
(***)
பக்தனின் காணிக்கையில் தான்
சாமி கூட
பணக்காரன் ஆகிறது!
(***)
ஏழை பணக்காரன்
வேறுபாட்டை
சாமிக்கும் வைத்து
சந்தோசம் அடைவது
நம்மையன்றி யாரால் ஆகும்?
(***)
பணக்காரச் சாமியென்றால்
அரசாங்கம் அரவணைக்கிறது
ஏழைச் சாமியென்றால்
எல்லையில் பார்ப்பாரற்று
கிடக்கிறது!
(***)
கடவுளின் எதிர்பார்ப்பு
பக்தி மட்டுமே
பணமல்ல!
(***)
அவருக்கே லஞ்சம் கொடுக்க
நெஞ்சம் கொண்டவர்கள் நாம்
அவரையாவது விட்டு வைப்போம்
இப்பழக்கத்தை விட்டொழிப்போம்!