தித்திக்கும் தீபாவளியை ஒரு திருநாளாய் மாற்றிடுவீர்

அந்தகாரம் விலக்கி ஒரு
அகல் ஒளி பரப்புதற்காய்
அரி அவன் அமைத்துத் தந்த
அழகிய திருநாள் இன்று!

பட்டாடை பளபளக்க எங்கள்
பக்கத்து வீட்டார் எல்லாம்
பம்பரமாய் கிளம்பி வந்து
பட்டாசு கொளுத்தி நின்றார்!

ஆடவரும் போதையால் பல
ஆட்டங்கள் போட்டு விட்டு
ஆடொன்றைப் பிடித்து அதன்
ஆத்மாவைப் போக்கி விட்டார்!

மகளிர் குழாம் நிறைந்து நல்ல
மங்கலப் பட்டாடை சுற்றி
மருவத்தூர் கோயில் சென்று
மகிழ்வுடனே வந்து நின்றார்!

ஆலயத்தில் பலரும் நின்று
ஆன்மாவை லயிக்கும் வேளை
ஆடவரில் இளசு வட்டம்
ஆரமிட்டார் நங்கை புறம்!

கற்பூர ஜோதி கண்டு
கண் ஒற்றும் வேளை அந்த
கயவர்கள் பார்த்து அவளை
கண்சிமிட்டிக் கேலி செய்தார்!

எல்லாமும் கண்டு விட்டு
எங்கள் வீடு திரும்பையிலே
எதிர்முனையில் வீணர் கூட்டம்
எத்தளங்கள் போட்டு நின்றார்!

மத்தியான வேளை தாண்டி
மந்தார குணமும் போக்கி
மங்கும் வேளை வந்தவுடன்
மகிழ்வுடனே வெளியில் வந்தார்!


தீபத்தில் எண்ணெய் வார்த்து
தீச்சுவாலை அமர வைத்து
தீன்பண்டம் சுவைத்துப் பலரும்
தீராது ஆடி நின்றார்!

இத்தனை சம்பவங்கள் கண்ணுற்றேன்
இறுதி வருடம் இதே நாளில்
இன்றைய நாளில் தானும்
இந்த நிலை மாறிடுமா?

சந்தோஷம் என்ற சொல்லை
சம்பாஷித்த போதும் அதனை
சந்தித்த நாள் மறந்த
சந்தியில் இருக்கும் பிச்சைக்காரன்!

உற்ற சொந்தம் கூடிநின்று
உறவினர்கள் சேர்ந்து வந்து
உவகையுற்ற போதும் கூட
உள்ளத்தால் வாடும் கூட்டம்!


மகிழ்ச்சியான நாளில் கூட
மனம் மகிழ இயலாமல்
மண்ணுலகை நீத்து விட்ட
மறைந்தாரை நினைக்கும் கூட்டம்!

எல்லாமும் கண்ட போதும்
எதையுமே அனுபவிக்க இயலாமல்
எந்தப் பொருளும் குழந்தைக்கு
எடுக்காது தவிக்கும் கூட்டம்!

இத்தனையும் உலகில் இருக்க
இன்றைய நாளில் உங்கள்
இன்பத்தை நிம்மதியாய் கொண்டாடி
இளைப்பாறத் தான் முடியுமா?

அஃதின்றி நீங்கள் ஒரு
அமைதியான திரு விழாவாய்
அடக்கத்துடன் கொண்டாடி மகிழ்வீர்
அகிலமும் இன்புற்று நிற்கும்!

பிறர் மனதைத் துன்புறுத்தி
பிரமாண்ட விழா காணல்விட்டு
பிரபஞ்சம் ஒளிவிடும் நாளில்
பிறரையும் பிரகாசிக்க வைப்பீர்!

உங்கள் அனைவருக்கும் என்
உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

எழுதியவர் : திருமதி அச்சலா சுகந்தினி (1-Nov-13, 11:35 am)
பார்வை : 91

மேலே