அகரமுதல்வன் கவிதை

ஒரு புள்ளியிலிருந்து
என்னை வரையத் தொடங்கும் தூரிகைகள்
துயர ரேகைகளில் மிரண்டு நசுங்குகிறது
புருவ விழிப்புக்களையும்
பெரு நிலக் களம் நடந்த கால்களையும்
துப்பாக்கியின் "டிகர்"படிந்த விரல்களின்
ஜீவ ரசத்தையும்
வர்ணங்கள் விழுங்கி மறைத்துக் கொண்டன
துயரக் கயிறுகளால் சுற்றப்பட்டு
மானுடம் வறண்ட வெளியில்
முகம் உதிர
ஆற்று நீரைத் தேடிச் செல்லும்
என்னுடல் துவாரங்களில் குரூரம் கொப்பளிக்கிறது
பல்வேறு கோணங்களிலெல்லாம்
நானென எனக்கு காட்சிப்படுத்தப்படும்
சுயமற்ற ஓர் உருவம்
வலியமுக்கி மாய்கிறது
துன்பச் சிலுவையோடு அசைவுறும்
காத்திருப்பு வாழ்வில்
மிலேச்சத்தனத்தின் நிழல்கள் படிய
சிறகுகள் தேடிச் செல்கிறது
மவுனித்த எனது சுயங்கள்.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (14-Nov-13, 9:41 am)
பார்வை : 209

மேலே