கத்தியின் காலம்
உன் கன்னங்களில் விழுந்து உடையும்
என் நிழல்
பிற்பாடு
நிழலின் தோளிலும் நிழலின் பாதங்களிலும்
ஒரு வண்ணத்துப் பூச்சியாய்
தன் மெல்லிய பாதங்கள் வலி கொள்ளாது
அமர்ந்து செல்லும்
என் பார்வைகள்
பிற்பாடு
உன் கைக்குட்டையின் ஓவியங்களெல்லாம்
என்னில் பதிந்துகொள்ளும்
வெறும் நூலால் பின்னிய சீலைதான்
உன் கையிலிருக்கும் குழந்தையை தாலாட்டும்
அந்த ராகத்தில்
என் நிலமைகளைப் பாட
குஞ்சுப் பருவத்து குயில் ஒன்றினை கொண்டுவருகிறேன்
அப்போது
உன் கடிதங்களெல்லாம் ரசமாய் இருந்தன
விசாரித்தேன்
உன் மூக்கு நுனியிலிருந்த ஒரு துளி வியர்வை
முற்றுப் புள்ளியாய் இருந்திருக்கும் என்பர்
அதுதான் பொழுது என்றாலும்
பறந்ததெல்லாம் மழைக் காலத்து செண்பகங்கள்
உன் வீட்டு பனங்கிழங்கு மேடைக்கு மேலே
என் ஆன்மாவின் முளை கொஞ்சம் வெளியே தள்ளியும் இருக்கிறது
அந்தரத்தில் பெய்த பத்துத் துளி மழையின் ஈரத்தில்
நான் நனைந்தேன்
உன் ஞாபகங்கள் துளிர்விடலானது
வேரிலிருந்த கிருமிகள் குருடாகின
துளிருக்கு இப்போது நல்ல ஆரோக்கியம்
நீ புகை மண்டலத்தை ஓவியங்கள் என்பவள்
நீ கூறிவிடலாம்
ஓவியங்களில் உறங்கு என்று
என் கழுத்தை நெரித்து கொல்லும் அந்த ஓவியங்கள்
என்னை உறங்கவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது காலம்
கத்தியின் காலம்