ஒருதலைக் காதல்

கற்பனைக் கதை
(உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்)
எனது பெயர் காவியா. எனது குடும்பமோ சிறிய அழகிய குடும்பம். ஒரு குடும்பத்தில் என்ன வெல்லம் இருக்குமோ அத்தனையும் என்குடும்பத்தில் இருந்தது. அழகிய ஒரு குருவிக் கூடு. அன்பிற்குப் பஞ்சம் இல்லை. அன்புதான் எம் ஒற்றுமையின் ஆணிவேர். இந்த அன்பான உறவுகளுக்குள் நானும் ஒருத்தி இருக்கிறேன் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியே. (பாடல் :- எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை .....………… )
வாழ்க்கைப் பாதை நன்றாகவே பயணித்துக் கொண்டிருந்தது. தந்தையாரின் வேலை மாற்றம் காரணமாக நாம் இருந்த இடத்தைவிட்டு எமக்கு அறிமுகமில்லாத ஊருக்குச் சென்றோம். முன் பின் தெரியாத மனிதர்கள். முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. கால ஓட்டத்தில் பழகி விட்டது.
எமது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் தான் எம்முடன் நன்றாகப் பழகினார்கள். அவர்களுக்கு எம்மை மிகவும் பிடித்துக் கொண்டது. நாட்கள் மாதமாகின. மாதம் வருடமாகின. அவர்களுக்கும் எமக்குமான அன்புப் பாலம் பலமாகி இருந்தது.
இந்தக் காலப் பகுதிக்குள் ராதா அன்ரிக்கு என்னை மிகவும் பிடித்துக் கொண்டது. எங்கு சென்றாலும் என்னை அழைத்தே செல்வார். நானும் சந்தோசமாகச் செல்வேன். இப்படி ஒரு பக்கம் இருக்க....... மறுபக்கம்…………..
நான் புதிய பாடசாலை செல்லத் தொடங்கி, நண்பர்களையும் சேர்த்துக் கொண்டேன். எனக்கும் குறிப்பாக சில சிறந்த நண்பர்கள் கிடைத்தார்கள். நாட்கள் நகர்ந்தன. தோழிகள் வழமைபோல் வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருக்கும் வேளை ராதா அன்ரி வீட்டில் எப்போதும் இருப்பதை அவதானித்துள்ளார்கள். இது போதாதா அவர்களுக்கு…. இதைச் சாக்காக வைத்து என்னைக் கிண்டல் செய்யத் தொடக்கி விட்டார்கள். (என்ன சொல்கிறேன் எனப் புரிய வில்லையா உங்களுக்கு ....??)
ம்.ம் ...
அன்ரிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அதில் ஒருவர் திருமணமானவர். இன்னொருவர் படித்துக் கொண்டிருக்கிறார். திருமணமாகவில்லை. அவரை என்னுடன் இணைத்துக் கதைக்கத் தொடங்கி விட்டார்கள். " என்ன காவியா ஏன் உன் அன்ரி உன் வீட்டிற்கு அடிக்கடி வருகிறார் தெரியுமா ??? மருமகளை யாரும் தூக்கிட்டு போயிட்டாலும் என்றுதான்...." நான் சொல்வது சரிதானே என்றாள் என் தோழிகளில் ஒருத்தி. அவர்களின் வாயை மூட நானும் ஏதேதோ சொல்லித்தான் பார்த்தேன். முடியவில்லை.
இந்நிலை தொடரத்தான் செய்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள் என விட்டு விட்டேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் என் தோழியின் பிறந்த நாளுக்கு பாடசாலைத் தோழிகள் எல்லோரும் சென்றிருந்தோம். அங்கு உரையாடிக் கொண்டிருக்கையில் பிறந்த நாள் தோழியான நிலா ஒரு பெரிய குண்டொன்றை தூக்கிப் போட்டாள். "எல்லோரும் நான் சொல்வதை அமைதியாகக் கேளுங்கள். அமைதி ..... அமைதி ..... உங்களுக்குத் தெரியுமல்லவா குணா அண்ணாவையும் அவருடைய நண்பர் ராஜா அண்ணாவையும். இவர்கள் இருவரும் நேற்றுக் கோயிலில் இருந்து என்ன கதைத்தார்கள் தெரியுமா ???என்னதான் கதைத்தார்கள் சொல்லு ....!!( தோழிகள் கூச்சலிட்டனர் )எங்கள் காவியாவை இருவருக்கும் பிடித்துள்ளதாம். இருவரும் வாக்கு வாதம் செய்து கொண்டார்களாம் .இறுதியில் காவியாயாரை நேசிப்பதாகக் கூறுகிறாலோ அவரே அவளை நேசிக்கலாம். மற்றவர் அவளை விட்டு விலகிட வேண்டும் என்று தமக்குள் சத்தியம் செய்துள்ளார்களாம்." என்று அவள் கூறியதும் தான் எனக்கு பக் என இருந்தது. அதோடு தோழிகள் பலதும் பத்தும் கூறி என்னை ஒரு வழிப் பண்ணி விட்டார்கள். இதை இவ்வளவு தெளிவாகச் சொன்ன தோழி வேறு யாருமில்லை. இந்த ராஜாவினுடைய உடன் பிறவா சகோதரி.
அவள் சொல்லிவிட்டாள். என் மனம் படும்பாட்டை யாருக்குச் சொல்லுவது. நாட்கள் நகர்ந்தது. முன்பெல்லாம் குணாவைக் காணும் போது என்மனதில் எந்தச் சஞ்சலமும் ஏற்படவில்லை. இப்போது ஏதோ ஒரு சஞ்சலத்தை உணர்கிறேன். முன்பெல்லாம் அன்ரிதான் எங்கள் வீட்டிற்கு வருவார். ஆனால் இப்போதெல்லாம் காரணமில்லாமல் நான் அங்கு செல்கிறேன். என்னுள் ஏதோ ஒரு மாற்றத்தை நான் உணர்கிறேன். ம்ம்ம்…. எனக்குப் புரிகிறது .இதுவேறு எதுவுமல்ல. இதுதான் அந்தப் பொல்லாத காதல் வந்து விட்டதற்கான சான்று என்று ……
இப்போதெல்லாம் என்மனம் எங்கோ சிறகடித்துப் பறக்கிறது. நம்பமாட்டீர்கள். என்னால் கவிதை கூட எழுத முடிகிறது. தனிமை மிகவும் பிடித்துள்ளது. அவன் மேல் என் காதல் உண்மை என உணர்ந்து கொண்டேன். காலம் தாழ்த்தினால் எங்கே என் காதல் கிடைக்காமல் போய்விடும் என்று மனதினுள் பயந்தேன். என் காதலைக் கூற ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தேன்.
அன்று குணாவினுடைய பிறந்தநாள். நல்ல ஒரு பிறந்தநாள் மடலை வாங்கிக் கொண்டேன். ஏதேதோ எழுத நினைத்தேன். எதுவுமே எழுத முடியவில்லை. இறுதியாக குணாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எழுதி முடித்தேன். அன்று நான் அம்மடலைக்கொடுக்கச் சென்ற வேளை அவர்கள் வீட்டில் யாரும் இருக்க வில்லை. அப்பாடியோ என மூச்சை வெளியே விட்டு குணா அருகே சென்றேன். அவர் தன்னிடம் கதைக்க வருவதை உணர்ந்தார். அவரும் அருகில் வந்தார். முன் இதுவரை ஒரு நாள்க் கூடப் அவருடன் பேசியதில்லை. பேச்சு வர மறுத்தது... அமைதி காத்தேன். திடீரென அவர் என்ன கையில் வைத்திருக்கிறீர்கள் என்றார் ?? நானும்... இது உங்களுக்கு என்றேன். எனக்கா!! ஆச்சரியம் அவர் வார்த்தையில் தென்பட்டது. அவர் கேட்ட மறு கணமே மீண்டும் தொடர்ந்தார். இது என்ன ?? இதெல்லாம் எதற்கு எனக்கு …?? நான் என்ன வெனச் சொல்வதற்குள் அவர் மீண்டும் பெரிய வார்த்தையை என் மேல் வீசினார். " இப்போது காதலிக்கும் வயது இல்லை ....." நான் அவர் கூறிய வார்த்தை கேட்டு மௌனித்து நின்றேன். சொல்வதற்கு எதுவுமின்றி உடனே அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டேன்.
அவர் சொன்ன வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. இப்போது காதலிக்கும் வயது இல்லை என்றால் இன்னும் சில காலம் காத்திருக்கச் சொல்கிறாரா?? அல்லது ….??? எதுவுமே புரியவில்லை. இதற்கான அர்த்தத்தை என்னால் யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. நாட்கள் மாதங்களாகின. என் காதல் வாழ்க்கை கனவில் இதமாகவே தொடர்ந்தது. நானும் என் தோழி நிலாக் கூறிய வார்த்தையின் நம்பிக்கையில் அவன் எனக்குக் கிடைப்பான் என்று எனது வாழ்நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.
இப்படியாக இருக்கையில் பழையபடி எம்ஊருக்குப் போவதாக எனது குடும்பம் முடிவெடுத்தது. அதன்படி நாம் எம்ஊருக்கு வந்தும் விட்டோம். என் நிலைமைதான் கவலைக்கிடமாக போய்விட்டது. பரீட்சை எழுதினால் முடிவு பாதகமாக இருந்தாலும் மனம் ஆறிடும். முடிவு கிடைக்காமல் நான்படும் வேதனையை எப்படிச் சொல்வது?? இந்நிலை யாருக்கும் ஏற்படக் கூடாது கடவுளே.
ஊருக்கு வந்ததன் பின் மனம் அமைதி கொள்ளும் என்று நினைத்தால் அது முற்றுமுழுதாக மாறிவிட்டது. அவனைக் காணமுடிவதில்லை. எதுவும் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்ற ஏக்கத்தில் மனம் அலையென அடித்துக் கொண்டிருந்தது. என்மனம் இப்படி ஒரு கரையில் தத்தளிக்க ……..,
மறுகரையில் இன்னுமொரு பிரச்சினை என்னை வரவேற்றுக் காத்திருந்தது. என் மைதுனரில் ஒருவர் என்னை விரும்புவதாக என்னிடம் வந்து கூறினார். நான் இருந்த மனநிலையில் அவருடைய காதலை மறுத்து விட்டேன்.ஆனால் அவர் விடுவதாக இல்லை. அவர் வேறு விதமாக நடந்து கொண்டார். என்ன வெனக்கேட்கிறீர்களா ??
ம்ம்ம்ம்... அவர் என்னைச் சூழ்ந்தவர்களிடம் எல்லாம் சென்று தானும் ,நானும் விரும்புவதாக கூறிக் கொண்டார். அவர்களும் அதை நம்பி விட்டார்கள். சொல்லவா வேணும்....??? என் வீட்டில் இருப்பவர்கள் என்னை ஒருபிடி பிடித்து விட்டார்கள். நான் எவ்வளவு மறுத்தும் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை. மனதில் சுமை கூடிக் கொண்டதே தவிர இறக்க வழி தெரியவில்லை.
இவ்வாறு இருக்கையில் உயர்தரப் பரீச்சையும் நெருங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய மனம் இருந்த நிலையில் என்னால்ப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பார்ப்பவர் கண்களுக்கு மட்டும்தான் நான் படிப்பது போல் தோன்றும். என்மனம் என்னிடம் இருந்ததே இல்லை. பரீட்சை நெருங்கியதால் மனதில் பயம் எழத் தொடங்கி விட்டது. வீட்டில் பரீட்சை எடுக்க மாட்டேன் எனச்சண்டை போட்டேன். நான் ஏதேதோ பொய்க் காரணங்களை அடுக்கடுக்காய் சொன்னேன். யாரும் என்னை நம்புவதாக இல்லை. அவர்கள் என்ன புள்ளி வந்தாலும் பரவாயில்லை. பரீட்சை நீ எடுத்தே ஆக வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்.
ஏதோ படித்ததைக் கொண்டு பரீட்சையும் எழுதி முடித்தேன். பரீட்சை முடிவும் வந்து சேர்ந்தது. என்னுடைய புள்ளிகளைப் பார்த்து பாடசாலை ஆசிரியர், நண்பர்கள் ஏன் என் வீட்டார் கூட அதிர்ந்துதான் நின்றனர். என்னைப் பலரும் கேள்வி கேட்கத்தான் செய்தனர். என் மௌனம் அவர்களுக்கு எதை புரிய வைத்ததோ தெரியவில்லை. அவர்கள் இதுபற்றி கேட்பதை நிறுத்திக் கொண்டனர். என்னுடைய தோழிகள் பலரும் பல்கலைக்கழகம் சென்று விட்டனர். அவர்களுடனான தொடர்பும் குறைந்து விட்டது. இப்போது தான் எனக்கு யாரும் இல்லாதது போன்ற உணர்வு தோன்றியது.
மனம் அமைதி இழந்து துடித்தது. வாழ்க்கை இரனமானது .ஏன் வாழ்வான் என்று கூடத் தோன்றியது. தோன்றியதுடன் நின்று விடவில்லை. அடுத்த படிக்குகூடச் சென்று விட்டேன். என்ன வென்று யோசிக்கிறீர்களா ?? இந்த வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று அவ்வப்போது வாங்கிக் கொண்ட தூக்க மாத்திரைகளைக் கையில் எடுத்துக் கொண்டேன். இது மரணத்தை உடன் கொண்டு செல்லாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அந்த நேரவேகம் என்னைத் தூண்டியது. கையில் மருந்தும்,நீருமாக அறையினுள் நின்று கொண்டிருந்த வேளை...., வெளியே என் அம்மாவின் குரல். யாருடனோ கதைப்பதுபோல் தோன்றியது. உற்றுக் கேட்டேன். பக்கத்து வீட்டு அன்ரியுடன்தான் கதைத்துக் கொண்டிருந்தார். " அவள் படிக்கக் கூடியவள். பரீச்சைக்கு முன் வருத்தம் வந்து விட்டது. அதனால் அவளால் படிக்க முடியவில்லை. இம்முறை நல்ல புள்ளி எடுத்துக் காட்டுவாள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். என் கையில் இருந்த மாத்திரை என்னைப் பார்த்துச் சிரிப்பது போலத்தோன்றியது. என் மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. எடுத்த இடத்திலேயே மருந்தை வைத்துவிட்டு வெளியே சென்று விட்டேன். எந்த ஒரு வேகத்தில் வெளியே வந்தேனோ அந்த ஒரு வேகத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். பரீட்சையும் நடை பெற்றது. சிறந்த புள்ளிகள் பெற்று, இன்று ஒரு ஆசிரியராகக் கடமையாற்றுகிறேன். காலம் எப்படி எம்மை மாற்றுகிறது பார்த்தீர்களா ???
காலம் மாற மாற நவீனமும் மாறிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த நவீன வளர்ச்சிதான் இன்றைய முகப்புத்தகம் என்றழைக்கப்படும் Facebook. எது இல்லாமல் இருக்கிறோமோ இல்லையோ இது இல்லாமல் இப்போது யாருமில்லை. என்னிடமும் Facebook. இருக்கிறது. அதுவும் என்னை விட்டு வைக்கவில்லை. முகப் புத்தகத்தில் நண்பர்களை ஏற்றுக் கொண்டதால் பல மனக்கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வந்தது. என்ன வெனக் கேட்கிறீர்களா??
இந்த நண்பர்கள் யாவரும் பார்க்காத இரகசிப் பகுதியால் ஒரு வணக்கம் போட்டுக் கொள்வார்கள். நானும் மரியாதைக்கு வணக்கம் சொல்லிக் கொள்வேன். அதோடு நிற்காமல் சுகம் கேட்பார்கள். நானும் மரியாதைக்கு தொடர்வதால் கடைசியில் என்னைப் பற்றி அறிந்து கொள்ளும் நிலைக்கு நானே கொண்டு வந்து நிற்பேன். அடுத்ததாக அவர்களிடத்தில் எப்படியான கேள்வி வரும் என உங்களுக்கே தெரியும். இந்தத் தொல்லையில் இருந்து விடுபடவே நான் முகப்புத்தகம் செல்வதை குறைத்துக் கொண்டேன். அப்படிப் போனாலும் like (விருப்பம் ) , comments(கருத்துரைகள்) கொடுப்பதில்லை. நான் மற்றவர்களுக்கு முகப்புத்தகம் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் இருந்தேன். இந்த உலகில் எவ்வளவு நவீனம் வளர்ந்தாலும் மனித மனங்கள் நவீனப்படவில்லை. எந்தப் பெண்ணும் ஆணுடன் வெளிப்படையாக நட்புக் கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் ஒன்று எங்கள் சமுதாயம்.
மற்றொன்று அந்த ஆண்மகன். அந்த ஆண் மகனே தோழியைக் காதலியாகத்தான் பார்க்கிறான். (இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.) நட்புடன் யாருடனும் பழக முடியவில்லை. அதனால்தான் இந்தப் பெண்கள் எடுத்த எடுப்பில் அண்ணா எனக் கூறி விடுகிறார்கள். இதுதான் உண்மை. (சரி அது இருக்கட்டும் என் கதைக்கு வருவோம்.)
இப்படித்தான் ஒரு நாள் எனக்கு ஒரு நண்பர் விண்ணப்பம் வந்திருந்தது.
நானும் யார் என பார்க்கையில்…………………… எனக்கு மிகப் பெரிய சந்தோசம். நீங்கள் நினைப்பது சரியே குணாவினுடைய நண்பர் விண்ணப்பம் தான் அது . கால் தரையில் இல்லை. எங்கோ இதயம் பறந்தது. சரி நட்பு விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்க்கலாம் எனத் திறந்தபோது………………. எனக்கு மிகக் பெரிய இடி காத்திருந்தது. அவருடைய அட்டைப் படத்தில் நான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு பெண். எனக்கு உலகமே நின்று விட்டது போல் தோன்றியது. கை, கால் பதறின. உடல்வியர்த்து. கண்களில் இருந்து நீர் அருவியாக ஓடியது. கல்லாகிப் போனேன் நான். கத்தி அழ வேண்டும் போல் தோன்றியது. என்னால் முடியவில்லை........
அன்று அவருடைய முகப்புத்தகம் பார்த்தபின் மீண்டும் முகப்புத்தகம் செல்ல எனக்குப் பிடிக்கவில்லை.
என் சோகத்தை வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் பூட்டி அழுது கொண்டிருந்தேன். முதல் முதலாய் என் மனச் சுமையை கவிதைகளாகக் கொட்ட முடிவெடுத்து எழுத ஆரம்பித்தேன்.
எழுதிய கவிதைகளை முகப் புத்தகத்தில் பதிவும் செய்தேன். சில மாதங்கள் ஓடின. மீண்டும் குணாவிடமிருந்து ஒரு செய்தி. காவியா உங்களுக்கு என்ன நடந்தது ??? எனக்கு உங்களுடன் கதைக்க வேண்டும் போல் உள்ளது. உங்கள் தொலைபேசி இலக்கத்தைத் தரமுடியுமா ??? என அந்தச் செய்தியில் எழுதப் பட்டிருந்தது. நானும் எதுவும் கேட்காமல் தொலைபேசி இலக்கத்தை அனுப்பினேன். அவர் முகப்புத்தகத்தில் இருந்திருக்க வேண்டும். உடன் பதில் வந்தது. நான் இப்பொழுதே கதைக்க வேண்டும் .கதைக்கலாமா??? என. நானும் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் கதைக்கலாம் என்று எழுதி அனுப்பினேன். சில வினாடிகளில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்தது.
தொலைபேசியை எடுத்து கலோ….(Hello ) நான் காவியா கதைக்கிறேன். அங்கிருந்த அந்தக் குரல் நா.....ன் .... குணா. வார்த்தையில் தடுமாற்றம். என் மனம்தான் ஏற்கனவே கல்லாகிப் போனதால் என்னால் தெளிவாகக் கதைக்க முடிந்தது. ஆ .. சொல்லுங்கள். அங்கு மௌனம் நிலவியது. தொடர்ந்தேன் நானே. எப்படி இருக்கிறீர்கள் ?? உங்கள் மனைவி எப்படி இருக்கிறார் ??அவரைக் கதைக்க விடாமல் நான். காவியா நாம் நலம்தான். நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன ஆச்சு ....?? உங்கள் முகப்புத்தகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.இன்னமும் நீங்கள் ......என்னை ..... அவர் கேள்விக்கு நானும். ம்ம்ம் .. என்று
முடித்துக் கொண்டேன். உங்கள் கவிதையைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். உங்கள் கவிதைதான் உங்களுடன் கதைக்க வேண்டும் என்று என்னைத் தூண்டியது. என் கவிதைக்கு அவ்வளவு சக்தி இருந்ததா?? (மனதில் நினைத்தபடி) ஆச்சரியத்துடன் அப்படியா ?? என்றேன்.
இப்பொழுது அவரை நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?? என்னிடம் நீங்கள் கூறிய வார்த்தை……..என்றேன். அவர் அதற்கு என்ன வார்த்தை எனக்கு ஞாபகமில்லை என்றார். சரி சரி… கூறிய நீங்கள் மறந்திருக்கலாம்
கேட்ட நான் மறக்கவில்லை." நானே சொல்கிறேன். இப்போது காதலிக்கும் வயது இல்லை என்றீர்களே" அதற்கு என்ன அர்த்தம். அதுவா ???? நான் இருந்த சூழ்நிலையில் அப்படிச் சொல்லிவிட்டேன். நீங்கள் ஏதாவது சொல்லிவிடப் போகிறீர்கள் என்று எண்ணி நானே முந்திக் கொண்டேன். நீங்கள் என்னிடம் வரும் போது என்மனதில் வேறு ஒரு பெண் இருந்தாள்.....என்றார். என்ன சொல்கிறீர்கள்.? உண்மைதான். நான் அப்போது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தேன். என் காதலை நான் அவளிடம் சொல்லவில்லை என்றார். எனக்கு இன்னொரு சந்தேகம். ராஜாவும், நீங்களும் கோயிலில் சத்தியம் செய்ததாக அறிந்தேனே ...?? இதை உங்களுக்கு யார் சொன்னது ??? அது ஏன் இப்போ யாரோ ஒருவர் சொன்னார்…… விடுங்கள் ... பதில் கூறுங்கள். அப்படிக் கதைத்தது ஏதோ உண்மைதான். என்னை நீங்கள் நேசிப்பீர்கள் என்று எனக்குப் பட்டது. நான் அவ்வாறு பேசிக் கொண்டேனே தவிர என் மனதில் அப்போது யாரும் இல்லை. ஆனால் ராஜாதான் உங்களை அதிகமாக நேசித்தான். நீங்கள் என்னிடம் கதைக்க வந்தது பற்றிச் சொல்லும் போதே அவன் மனம் உடைந்து போனான்.அதோடு அவன் உங்களைவிட்டு விலகிப் போய்விட்டன். அடக்கடவுளே இதற்குள் இப்படியும் ஒரு கதை இருக்கா ????? ஆச்சரியம் தான் மிஞ்சி நின்றது எனக்கு. சரி இதையும் விடுங்கள்……. அப்படியென்றால் நீங்கள் நேசித்த
பெண்ணையே மணந்து கொண்டீர்கள் சந்தோசம் என்றேன். நீங்களோ நானோ எதிர்பார்க்காத பதில் வந்தது. இல்லை..........
என் உள்ளம் மீண்டும் ஆச்சரியத்தின் உச்சியில் அப்படி என்றால்..... அவர் தொடர்ந்தார்.
நான் அவளைக் காதலித்தேன். அவளிடம் சென்று கூறுகையில் அவள் என் காதலை ஏற்க மறுத்து விட்டாள். என்னால் அந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. அவ்வேளை பார்த்து என் மாமாப் பொண்ணு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருகை தந்திருந்தாள். அவளுக்குத் தாய்மை அடையக் கூடிய சக்தி இல்லை. சிறுவயதில் ஏற்பட்ட வாகன விபத்தில் அவளுக்கு
அவ்வாறு நடந்து விட்டது. நான் அவளை மணம் முடிப்பதாக முடிவெடுத்து, அவளுடைய சம்மதத்துடன் மணமும் முடித்துக் கொண்டேன். என்று அவர் கூறுகையில் .... என் மனம் நிலை குலைந்து தான் போனது. எனக்கு என் சுமை தெரியவில்லை. அவரை ஆற்றுவதற்கு வார்த்தையைத் தேடினேன்.
ஏதோ என்மனம் இவற்றைக் கேட்டதன்பின்னும் என் கேள்வி மட்டும் நிற்கவில்லை. தொடர்ந்தேன்.
அந்தப் பொண்ணு வேண்டாம் என்று சொல்லியது சரிதான் இருக்கட்டும். அதன்பின் கூடவா என்னை உங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றேன். நினைத்துப் பார்க்கவில்லை என யார் சொன்னது நினைத்துப் பார்த்தேன். ஆனால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ...?எப்படித் தொடர்பு கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நானும் மனக் குழப்பத்தில் தான் இருந்தேன். அந்த சமயம் பார்த்து மாமாப் பொண்ணும் வந்திருந்தாள். நான் மாமாப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்ததும் ஆகுது யார் கண்ணுக்கும் எட்டாத தூரத்திற்கு சென்றதும் ஆகுது என்று மணம் முடிக்க முடிவெடுத்தேன் என்றார். இதன் பின்னும் கேள்வி கேட்பது நல்லதாகப் படவில்லை. இப்போது நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்களா??? என்று மட்டும் கேட்டேன். சந்தோசமாகத்தான் இருக்கிறோம். குழந்தை இல்லை என்று தான் மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் எனக்கு அது பற்றி வருத்தமில்லை. என்றார்.
என்கதை இருக்கட்டும் காவியா .நீங்கள் இனிமேலாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் . திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றார். நான் நேசித்த ஒருவர் பல ஆண்டுகள் கழித்து எனக்குச் சொல்லும் பதில் …. (.எனக்கு சிரிப்புத்தான் வந்தது.) அவர்தான் நடந்தவைகளைச் சொல்லிவிட்டார். அவருக்கு ஏன் எந்நிலைப்பாட்டைச் சொல்லிக் கவலைப்படுத்துவான் என நினைத்து… வீட்டில் வரன் பார்க்கிறார்கள். சரிவந்ததும் திருமணம் செய்து கொள்ளவேண்டியதுதான். என்றேன்.
ஒருவாறாக கதைக்க வேண்டிய முக்கியமான விடயங்களை கதைத்துக் கொண்டதாக எண்ணி இருவரும் விடை பெற்றுக் கொண்டோம்.
ஏனோ அவனுடன் கதைத்ததில் இருந்து மனம் கவலையாகவே இருந்தது. என் கவலையை போக்க கோயிலுக்குச் சென்றேன். இறைவா இங்கு என்னதான் நடக்கிறது ?? நான் நேசித்தவன் எனக்குத்தான் கிடைக்க வில்லை என்றிருந்தேன். அவன் நேசித்தவளும் அவனுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே. அவன் நல்ல படியாக வாழ்வான் என்று நினைத்திருந்தேனே இன்று எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறதே. நான் என்ன பாவம் செய்தேன்.? என் கேள்விக்கான பதில் இத்தனை ஆண்டுகள் களித்தா கிடைக்க வேண்டும். கேட்ட பதில் கூட சந்தோசப் படும்படி இல்லையே ...!! நான் அவனை நேசித்தது நியம். அதுதான் காலம் கடந்தும் என் அன்பு இன்று அவனை என்னுடன் பேச வைத்துள்ளது. நான் அவனை நேசிக்காமல் இருந்திருந்தால் அவன் நேசித்த பொண்ணு கிடைத்திருப்பாளா ??? என்னை மீண்டும் புலம்ப விட்டு விட்டாயே இறைவா!! இன்றைய முகப்புத்தக வசதி அன்றிருந்திருந்தால் இன்று எனக்கு அவன் கிடைத்திருப்பான். என் வாழ்க்கையும் சந்தோசமாக மாறி இருக்கும். இறைவா !! என்னைப் புலம்ப விட்டு விட்டாயே !!
என் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்தேன் இறைவன் சந்நிதியில். எல்லாக் காயங்களும் ஆறிடும். இந்தக் காதல்க் காயம் மட்டும் ஏனோ ஆறுவதாகத் தெரியவில்லை.
இதுதான் என் வாழ்க்கையில் நடந்தது. அவர் எங்கோ ஒரு மூலையில் வாழ்கிறார். நான் எங்கோ ஒரு மூலையில் வாழ்கிறேன். என்னை நேசித்த உறவுகளும் தனக்கென ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோசமாக வாழ்கிறார்கள். அவர்கள் எனக்குத் திருமணமாக வில்லை என்பதால் என்னைப் பார்த்துக் கிண்டல் செய்கிறார்கள். " உலக அழகி என்று நினைப்பு அவாவிற்கு ...அதுதான் இன்னமும் ஒரு மாப்பிளையும் கிடைக்கவில்லை." என்று.. அவர்களுக்கு என்ன தெரியும் என் காதலைப் பற்றி...?? எல்லோரும் திருமணமாக வேண்டும் என்பதற்காக பொய்யுக்கு மேல் பொய் சொல்கிறார்கள். நான் திருமணம் ஆகக் கூடாது என்பதற்காக பொய்யுக்கு மேல் பொய் சொல்கிறேன். இன்னும் சில ஆண்டுகள் தான் .அதற்குப் பிறகு மாப்பிளை பார்க்கும் படலம் தானாகவே நின்றுவிடும்.
நீங்களே சொல்லுங்கள் ஒருதலையாகக் காதலித்தால் அது காதல் இல்லையா?? சந்தர்ப்பம் சூழ்நிலை எனக்குச் சாதகமாக வில்லை அவ்வளவுதான். இன்னொரு விதமாக யோசித்துப் பாருங்கள் .உலகில் எத்தனை ஆடவர்களை பார்க்கிறோம். எல்லோரையும் எம் வாழ்க்கைத்துணையாக நினைத்துப் பார்ப்பதில்லையே. யாரோ ஒருவன் எம்மனதில் வந்து குடிகொண்டு எப்படி இறைவன் இருப்பதை உணர்வதைப் போல் காதல் என்ற ஒன்றை உணர்த்திவிடுகிறான். அப்படிப்பட்ட ஒருவனை எப்படி மறந்து வாழ்வது?? திரு.குணாவை நினைத்துப் பார்க்க கூட என்னால் முடியாது. அவன் வேறு ஒரு பெண்ணின் கணவன். ஆனால் செல்வன் குணாவை நான் நினைப்பதை யாரும் தடுக்க முடியாது. என்னால் குணாவை மறக்கமுடியாது. என் இறுதி நாட்கள் வரை அவன் நினைவுடனே வாழ்ந்திடுவேன்.