நாள் வாராதோ

வஞ்சகம் ஒன்றே வாழ்வெனக் கொண்டு
==வையகம் தன்னில் வாழ்ந்திடும் கூட்டம்
நெஞ்சகம் நிறைய பொய்களை வைத்து
==நிமிர்ந்து நடந்திடும் நிலைதனைப் பார்த்து
சஞ்சலம் கொள்ளா வகைதனில் நாளும்
==சந்திரன் ஒளியென புன்னகை பூத்து
தஞ்சமாய் அவர்தம் திருவடி நாடி
==தலைவனாய் காணும் பக்தரும் கோடி.

மக்களின் வாக்கால் வெற்றியும் அடைந்து
==மாபெரும் பதவியை பொறுப்பென ஏற்று
தக்கதோர் நிலையை அடைந்ததன் பின்னர்
==தன்னிலை மறந்திடும் மன்னவர் இவரை
சிக்கலை தீர்ப்பதில் வல்லவர் என்று
==தினசரி போற்றும் ஊடகம் எல்லாம்
துக்கமே வாழ்வென வாழ்பவர் துயரை
==துடைத்திட மறந்ததை நாடக மாக்கும்.

வெட்கமாய் இருந்திடும் செயல்களில் மட்டும்
==வெற்றிகள் அடைந்திடும் வீரராம் இவரை
மட்டமாய் யாரும் பேசுவோ ரென்றால்
==மறுகணம் சிறையில் தள்ளவே ஆயிரம்
சட்டமும் திட்டமும் நாட்டினில் உண்டு.
==சட்டமே அறியா குற்றவா லிகளாய்
கொட்டமும் அடிப்போர் குடுமியை பிடித்து
==கூட்டினில் அடைத்திடும் நாள்வா ராதோ?
==

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Nov-13, 2:42 am)
பார்வை : 90

மேலே