தோல்வி என்பது என்ன

தம்பி தம்பி நீ எழுந்து நில்லடா!!
தங்கக் கம்பி நீ நெளிந்து துள்ளடா!
கண்டுக் கொண்ட நீ தொடர்ந்து செல்லடா!
நின்று வென்று நீ முயன்று சொல்லடா!

தோல்வி என்பது என்ன உண்டடா?
தோற்ப தென்பதும் ஒன்னும் இல்லடா!
வெற்றி என்பதே எட்டும் கோடடா!
தொட்டு முயல்வதும் தோல்வியல்லடா!

சொந்தப் பலத்திலே நம்பித் துணியடா!
அந்த வலிமையும் இன்னும் பலமடா!
வாலி பலத்திலும் பாதி உனக்கடா!
நாளை உலகிலும் மீதிக் கணக்கடா!

தோளை உயர்த்தி ஆளை நிமிர்த்தடா!
காளை சிலிர்த்தும் காலைப் பதித்தடா!
வேளை இதுவென வேட்டி மடியடா!
ஊழை மடமென உதறி முடியடா!

கெடுப்பா ருண்டு விடுத்து விலகடா!
சொடுக்கி யுன்னை முடுக்கி முனையடா!
படுத்திப் பழிக்கும் பக்கம் மறையடா!
அடுத்து அணைக்கும் அன்பர் துணையடா!

எடுத்தக் காரியம் தடுப்ப தென்னடா!
தொடுத்து வீரியம் மடுத்துப் பண்ணடா!
அடுத்து விளையும் அனுபவம் தானடா!
எடுத்து உனையும் ஏற்றும் படியடா!

கற்றக் கல்வியில் பெற்றதும் அறிவடா!
மற்றக் கல்வியில் உற்றதும் தொழிலடா!
நற்ற முயல்வினில் இட்டதும் செயலடா!
தொற்றும் வறுமையும் விட்டும் விலகடா!

நெஞ்சில் நம்பிக்கை தஞ்சம் தந்தடா!
அஞ்சும் எண்ணிக்கை விஞ்சி முந்தடா!
பஞ்சைப் போலவே பற்றிக் கொள்ளடா!
பஞ்சம் போக்கவே வெற்றி அள்ளடா!


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (1-Dec-13, 1:18 am)
பார்வை : 318

மேலே