ஆக்சிஜன் அரை கிலோ எத்தனை டாலர்

சுவாசத்தில் சுமையில்லை
சுற்றுப்புற மாசு இல்லை
விசிறியே தேவையில்லை
பசுமரங்கள் தாலாட்டும்

ஊரெங்கும் நீரோட்டம்
மண்ணை புரட்டிய
கற்களை உருட்டிய
நதிகளும், ஆறுகளுமாய்..!

கற்கால வாழ்க்கை அல்ல
கனவென்று எதுவுமில்லை
நம் முன்னோர்கள் நமக்கு
கொடுக்க மறந்த பூமி அது

வளம் கொழித்த என் நாடு
வாழ்ந்துவிட்ட அலுப்போடு
வீழ்ந்து கிடக்கு தற்போது

மும்மாரி பொழிந்த பூமியாம்
இதுவரை பார்த்ததில்லை
நாம் பார்க்கும் காட்சியெல்லாம்
வறுமையும். வறட்சியுமாய்

வந்தோரின் பசியாற்றிய
என் தேசம் - இன்று
வருவோரை பார்க்கிறது- பசியோடு

பசுமாடு கால் பதித்த
வயல் வரப்புகளில்
பல மாடி கட்டிடமாய்
சோறு போட்ட நிலத்தை
சத்தியமாய் காணவில்லை

மெல்ல மெல்ல அடகு வச்சி
பாதி நாடு பறிபோச்சி
குடிக்கும் நீரும் பணமாச்சி
காற்றில் மாசு கலந்துடுச்சி

ஆற்றில் ஓடிய நன்னீரை
அள்ளிப் பருகினர் அந்நாளில்
தொண்டை நனைக்க நீரும் இப்போ
துட்டுக்கு தான் கிடைக்கிறது

வீசும் காற்றுக்கு விலையில்லை
சுவாசக் காற்றுக்கு வந்திடுமோ...?

ஆக்சிஜன் அரை கிலோ
எத்தனை டாலர்? என்று
நம் பிள்ளைகளும் கேட்டிடுமோ...?

==========
கதிர்மாயா
==========

எழுதியவர் : கதிர்மாயா (6-Dec-13, 11:24 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 126

மேலே