அசரீரியின் இசையில் எனது ஓலம்

துடி துடித்து புலரும் பொழுதொன்றில்
இரவுகளின் சாம்பல்களை தட்டி
ஜீவிதத்திற்குள் பயணமாகும்
என் கால்களில் சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கிறது
கைகளில் விலங்குகளும்
நகத் தசைகளில் ஊசிகளும் குத்தி நிற்க
ரணங்களின் மேடுகளில் முளைவிடும் புற்களென
என்னிலிருந்து வழியும் ரத்தங்கள்
காலத்தின் குளத்தில் குமுழிவிடுகிறது
நோகாத கண்கொண்டு நோக்கும் குருடர்க்கும்
கேளாத செவிகொண்டு கேட்கும் செவிடர்க்கும்
சொட்டுச் சொட்டாக மரணிப்பது
அசரீரியின் நிழலாகவும் இசையாகவும் நீள
கவிதையின் தொடக்கத்தில் என்னுயிர்
இருந்ததைவிட
இன்னும் மரணித்துவிட்டதை
நீங்களும் அறிய வாய்ப்பில்லை
எழுதிக் கொண்டிருக்கும் இக்கவிதையைப் போல.

19.12.2000யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொது மக்களுக்கு .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (19-Dec-13, 9:10 am)
பார்வை : 107

மேலே