அது போதும் எனக்கு -குமார் பாலகிருஷ்ணன்

பிஞ்சுப் பிரபஞ்சமாய்
இஞ்சுக் கணக்கில்
பத்து மாதம்
என் வயிற்றில் வளர்ந்த
வளர்பிறையே…….

என் சேலையையேச்
சுற்றிச் சுற்றி வந்து
என் பூமியைச் சுழற்றிய
பூமா தேவனே…!
என் செல்ல மகனே..!

நீ பேசிய மழலையின்
நியாபகத்திலும்
நீ முதல்முறையாய்
வாங்கிக் கொடுத்த
சுங்குடியின் நினைவுகளிலும்
நான் நலம்..

நீ நலம் பேண
உணவு கிடைக்கும் வேளைகளெல்லாம்
பாதாள மாரியம்மனுக்காய்
மண்சோறு கொணர்கிறேன்….

உன் வயதை ஒத்தவர்கள்
எவரேனும் என்னைப் கடக்கையில்
வெள்ளை விழுந்த என் கண்ணெல்லாம்
உன் நிழல் விழுகிறது மன்னவனே…
மின்னல் போலேனும் வந்து
முகம் காட்டிச் செல்ல மாட்டாயா
அன்பு ராசாவே…

பாவம்
உனக்கங்கே நேரம்
கிடைக்கப் போகிறது..

,நீ உன் வீட்டு நாய்க்குட்டியை
மருத்துவமனைக்குக்
கூட்டிச் செல்ல வேண்டும்…

உன் காதல் மனைவியை
அழகு நிலையம்
அழைத்துச் செல்ல வேண்டும்…

அங்கே உன் நண்பர்கள் வேறு
மட்டைகளோடும் பந்துகளோடும்
காத்திருப்பார்கள்…

உன் வீட்டுக்கு எதிரே இருக்கும்
பிள்ளையார் கோவிலின்
உற்சவ வேலைகள்
மற்றும் இன்னும் பிற
வேலைகளுக்கிடையில்
உனக்கங்கே நேரம்
இருக்கப் போகிறது
பக்கத்துத் தெருவில் இருக்கும்
என்னை வந்து பார்க்க…

பராவாயில்லை மகனே
நீ புதிதாக கட்டும்
அந்த பளிங்கு வீட்டில்
நான் சலனமில்லாமல் வந்து
என் பேரனை மறைந்திருந்து
பார்த்துச் செல்ல
என் கூனின் உயரத்தில்
ஒரு சாளரம் அமை..
அது போதும் எனக்கு…

எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன் (27-Dec-13, 11:16 pm)
பார்வை : 199

மேலே