இமையம் சரிந்தது
சீர்முகத்தைக் கொண்டவனே
இன்முகத்தால்
வலம் வந்தவனே
எழுத்துலகு வேந்தனே
சிறுகதை மன்னனே
அறிவுக் கழஞ்சியமே
அன்பின் மேலோனே மு.அன்புச்செல்வனே
இலக்கியம் படைத்தது போதுமென்று
மூச்சை நிறுத்திக் கொண்டாயோ………?
மலேசிய இலக்கியத்தை
அயல் நாட்டிலும்
மணம் கமலச் செய்தவனே
முத்தான கதைகளால்
முதல் வரிசையில் பேரரசாய்
முடிசூட்டிக்கொண்டவனே
உன்னை இழந்து
பொட்டிழந்தப் பூவையாய்ப்
பொழிவிழந்து போனது
மலேசிய இலக்கியம்……………….!
உன் எழுதுகள்
சாகா வரம் பெற்றவை
வாசிக்கும் வேளை
வாய்விட்டுச் சிரிப்பேன்
இனி உனை நினைத்து
கண்ணீரில் மிதப்பேன்
என்னைத்தேற்ற நேரில்
வந்தால்தால்தான் ஆச்சு………….!
துடுப்பில்லா பயணமா
பொங்கியெழும் அலைகள்
மரண பயம் கட்டிக் கொள்கிறது
மனதில் தெம்பில்லை
உடலில் வலுவில்லை
போக்கிடம் தெரியவில்லை
உலகம் இருண்டுவிட்டது
நிர்வாண உலகம்
கண்ணுக்கெட்டியத் தூரம் தெரிகிறது……………!
உன் இடம்
நிரப்புதற்கு எவரும் இல்லை
முயன்றாலும் தோல்விதான்
உனது சிம்மாசனம்
உனக்கு மட்டுமே இறைவன்
வகுத்ததை மனிதன்
மாற்ற முடியுமா?
இருக்கும்வரை
உண்மையாய்ப் போராடினாய்
இறந்தபின்பும் உன்புகழ்ப்
பாடவைத்தாய்
இலக்கியத்தாய்க் கண்ணீர் விடுவாள்
உலகம் உள்ளமட்டும்
உலகெங்கும் உன் படைப்பு
எழுச்சியுடனே நிமிர்ந்து நிற்கும்
உன் ஆத்மா சாந்தி பெற உலகம்
வணங்கி நிற்கும்…………………!