அப்புவின் சந்தேகம் தொடர்கிறது

அப்புவின் சந்தேகம் தொடர்கிறது ...

அப்புவின் தந்தை அலுவலக வேலையாக தில்லிக்கு சென்றிருக்கிறார். அப்புவின் அக்கா படுத்து உறங்கி விட்டாள். தாயின் வருகைக்காகக் காத்திருக்கும் அப்பு, தூக்கமின்றித் தவித்திருக்க, மற்ற அறைகளில் ஒளிவிட்டுக் கொண்டிருந்த விளக்குகளை அணைய, அப்புவின் மனதில் உற்சாகம் தோன்றியது. ஓரிரு நொடிகளில் தாய் கட்டிலில் படுத்துக் கொள்ள வந்துவிடுவாள் என்று நம்பி இருந்தான். அவளும் வந்தாள்.

அம்மா

என்னடா

கேட்டா கோபிச்கிப்பியா

அது நீ என்ன கேட்கப்போகிறாய் என்பதை பொறுத்து இருக்கு

நம்ம பக்கத்து வீட்டு ஆண்டீயும் அவங்க பொன்னும் ஏன் நம்ம வீட்டுல வந்து தினம் தினம் டீவீ சீரியல் பாக்கறாங்க. அவங்க வீட்டுல தான் டீவீ இருக்கே அம்மா

ஓ .. அதுவா .. அம்மாவும் அந்த சிரியல் பாக்கறேனே .. அதுதான்.

அவங்க வேற சீரியல் ஒன்னும் பாக்க மாட்டாங்களா

பாப்பாங்களே

அப்போ அந்த சீரியல் எல்லாம் நீயும் தான் பாக்கறே. அப்போ ஏன் அவங்க வரதில்லை.

அது உனக்கு தெரிஞ்சு தான் ஆகணுமா டா

ஆமாம்மா

சொல்ல மாட்டேன்னா என்ன செய்வ

.......... (அப்பு மௌனமாக இருக்க, தாய் மீண்டும்)

என்னடா .. பதிலே காணோம்

எனக்குத் தெரியும்

என்ன தெரியும்

நான் சொன்னா, அது சரியா இருக்கும்

எப்படி

அந்த அக்காகிட்ட கேட்டேன்

என்ன கேட்ட

நீங்க ஏன் இங்க வந்து டீவீ பாக்கறீங்கன்னு

அதுக்கு அக்கா என்ன சொன்னா

அவங்க அப்பாவுக்கு நைட்டு ஷிப்டாம். அவரு தூங்கிக்கிட்டு இருக்காறாம். சத்தம் கேட்டா கோபிச்சுப்பாறாம். அதனாலத் தான் இங்க வந்து டீவீ சீரியல் பாக்கறாங்கலாம்.

தாய்க்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியாமல் இருக்க, அப்பு தொடர்ந்து ..

ஆனா அன்னிக்கு ஒருநாளு அவங்க வீட்டுல நான் கார்டூன் டீவீல சோட்டா பீம் பார்த்துக் கிட்டு இருந்தேன். அப்போ அந்த ஆண்டீ, அந்த அக்காவுக்கு படிக்கனும்ன்னு சொல்லி டீவீய அணச்சு வெச்சுட்டாங்கம்மா.

அப்படியா .. நீ சொல்லவே இல்லையே

ஆனா நான் படிச்சுகிட்டு இருக்கும் போது மட்டும் அவங்களுக்கு எப்படி அம்மா டீவீ பாக்கத் தோணுது .. அதுவும் நம்ம வீட்டுல வந்து

தாய்க்கு அழுவதா, இல்லை தன் மகனின் அறிவைப் புகழ்வதா எனத் தெரியாமல், கட்டி அணைத்து முத்தமிட்டு,

சரி .. சரி .. நீ இப்போ தூங்கு .. காலைல ஸ்கூலுக்குப் போக னும்ல ..

ஓ கே அம்மா .. குட் நைட்டு அம்மா என்று சொல்லி கண்களை இருக மூடிக் கொண்டான்.

= தொடரும் =

எழுதியவர் : (5-Jan-14, 2:20 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 124

மேலே