தீர்வுகளைத் தேடி

நாளைய பொழுது எப்படி
விடியும் என்று எனக்கு
நிச்சயமாய் தெரியாது !

எங்காவது ஒரு பெண்
கற்பழிக்கப்பட்டிருக்கலாம்
ஈழத்திலோ நடுக்கடலிலோ
எம் தமிழனின் துயரங்கள்
இங்கு அரசியலாகலாம்
பிச்சைச் சட்டியிலும்
கையிடத் துடிக்கும் தானைத் தலைவர்கள்
கோடி கோடியாய் அடித்த கொள்ளை
தொலைக்காட்சி செய்தியில்
தொடராய் போகலாம்
ஐம்பது ரூபாய் கையூட்டு பெற்ற
கடைநிலை ஊழியனை கையோடு
பிடித்த செய்தியில் ஊழலை
அழித்ததாய் உற்சாகம் கொள்ளலாம்
ஓசையின்றி ஓர் விலையேற்றம்
அரங்கேற்றமாகலாம்
தேர்தல் திருவிழாவின்
பகடையாட்டங்கள் ஆரம்பமாகலாம்
இன்னும் இன்னும் எத்தனையோ இருக்கலாம்

வாய் கிழிய விவாதித்து
முக நூலில் கருத்தெழுதி முடிந்தால்
தெருவிறங்கி ஆர்பரித்து
என் கடமை முடிந்ததென
இனிதாய் உறங்கச் செல்வேன்
உறக்கத்தில் எல்லாம்
மறந்தும் போவேன்
நேற்றைப் போலவே இன்றும்
இன்று போலவே மீண்டும்
சூரியன் கிழக்குதிக்கும்
மாற்றங்களே இல்லாமல் !

எழுதியவர் : thilakavathy (7-Jan-14, 11:10 pm)
பார்வை : 71

மேலே