புது யுகத்தின் ஆரம்பம்

என்னால் ஒரு துன்பம்
எவர்க்கும் இல்லையென்றால்
அதுவே மகிழ்வின் ஆரம்பம்!

என்னால் ஒரு இன்பம்
எங்காவது துளிர்க்குமென்றால்
அதுவே அன்பின் ஆரம்பம்!

என்னால் ஒரு நன்மை
ஒரு சிற்றுயிரேனும் பெற்றால்
அதுவே வாழ்வின் ஆரம்பம்!

என்னால் ஒரு தீமை
என்றேனும் அழிக்கப்பட்டதாயின்
அதுவே அமைதியின் ஆரம்பம்!

என்னால் ஒரு பாதை
இன்றேனும் புதுப்பிக்கபடுமாயின்
அதுவே பயணத்தின் ஆரம்பம்!

என்னால் ஒரு கனவு
இந்த நாட்டிற்காய் காணப்படுமாயின்
அதுவே தேச விடியலின் ஆரம்பம்!

என்னால் ஒரு லட்சியம்
இந்த உலகிற்காய் தோன்றுமாயின்
அதுவே புரட்சியின் ஆரம்பம்!

என்னால் ஒரு பெருமையை
இந்த மானுடம் அடையுமென்றால்
அதுவே மேன்மையின் ஆரம்பம்!

என்னால் தூவப்படும் இவ்விதைகள்
உங்களுடையதும் ஆகும் என்றால்
அதுவே புது யுகத்தின் ஆரம்பம்!

****************************************************
— ரத்தினமூர்த்தி, திருப்பூர்
நன்றி ; தினமலர் வாரமலர்
[குறிப்பு; இந்தக் கவிதை., தினமலரில் வெளியாகும் மூன்றாவது படைப்பாகும் ]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (12-Jan-14, 11:13 am)
பார்வை : 469

மேலே