பிணந்தின்னிக் கழுகு----அஹமது அலி---

உக்கிர வன்மம் கொண்டு
அக்கிரமங்கள் புரியும் மனிதவுரு
நரமாமிச உண்ணி சுற்றி வருகுது
நரபலியெடுக்க நாடகமாடுது!
/-/
சத்தியக் கண்களையெல்லாம்
அசத்திய அலகால் அசாத்தியமாக
கொத்திக் குதறி கொக்கரிக்குது
விசமதை வீரியமாய் கொப்பளிக்குது!
/-/
ஆறாம் அறிவு மேதையென்று
ஐந்தாம் அறிவிலே பாடம் நடத்துது
சிந்தை சீர்தூக்கிப் பார்க்காமலே
அகந்தையில் ஆட்டம் போட்டலையுது!
/-/
நீதிக்குப் பின்னால் நிழல் காட்டுது
ஆதிக்க வெறியால் தலை நீட்டுது
போதிக்கு கீழமர்ந்து போதிக்குது
பாதி பித்தினில் புத்தர் வேசம் கட்டுது!
/-/
பிணம் தின்ன வாய் பிளக்குது
இனம் பார்த்து ருசி பார்க்குது
ருசி பார்த்தபின் ஏப்பம் விடுது
பசியில் மீண்டும் மோப்பம் பிடிக்குது!
/-/
உச்ச விழிப்புணர்வு இல்லாது போக
மிச்ச உயிர்களும் இல்லாது போகும்
பிணந்தின்னி கழுகை விரட்டிட
இணக்கத்தில் இணைவது அவசியமே!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (19-Jan-14, 10:17 am)
பார்வை : 3734

மேலே