குரல்

அடக்கம் என்பது விநயம். நம்பிக்கை என்பது ச்ரத்தை. இந்த இரண்டுமே நமக்கு இரு கண்கள் போல. குரு என்றால் வழிகாட்டுபவர், அவர் காட்டும் வழியில் நாம் செல்லவேண்டும். கண் இருந்தால்தானே ஒரு வழியில் போக முடியும். அப்படி நமக்கு இரு கண்களாக இருப்பவைதான் விநயமும், ச்ரத்தையும். இந்த இரண்டில் ஒன்று இருந்தாலே இன்னொன்றும் வந்துவிடும். ஒன்றிடம் நான் அடங்கிக் கிடக்கிறோம் என்றாலே அதுதான் நமக்கு நல்லது செய்யும் என்ற த்ருட நம்பிக்கையாலேயே அப்படி கிடக்கிறோம். அதே மாதிரி, ஒன்றிடம் நாம் அதுவே ப்ரம ப்ரயோஜனம் தருமென்று த்ருட நம்பிக்கை வைக்கிறோமென்றால், அந்த ப்ரயோஜனத்தைப் பெற அதனிடம் அடங்கிக் கிடக்கத்தானே செய்வோம்?.

கீதையிலே பகவான் விநயத்தையும் சொல்லியிருக்கிறார், ச்ரத்தையையும் சொல்லியிருக்கிறார். முதலில் 'ப்ரணிபாதம்' என்கிற நமஸ்காரம். பிறகு பரிப்ரச்னம் என்கிறதாக கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது, ஸேவை என்பவற்றை சிஷ்ய லக்ஷணமாகச் சொன்னார். ஸேவைதான் குருவுக்குச் செய்கிற தொண்டு; பலவெஇதமான பணிவிடைகள். அதுவும் வித்யையை ஸ்வீகரிப்பதற்கு ஜீவாதாரமான அம்சங்களில் ஒன்று. அப்பறம் "ச்ரத்தாவான் லபதே ஜ்ஞானம்" [சிரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான்].என்றும் சொல்லியிருக்கிறார்.

பரிப்ரச்னம் [கேள்வி கேட்பது] என்பது எப்படி விநயமாகும்?. குரு சொல்வதில் நிச்சயம் ஏற்படாவிட்டால்தானே இப்படிக் கேட்கத் தோன்றும்?. ஆகையால் குரு சொல்வது புரியவில்லை அல்லது அவரிடமே ஸந்தேகத்தைக் காட்டுவது போல அல்லவா இந்த பரிப்ரச்னம் என்பது தோன்றுகிறது?. "ஸம்சயாத்மா விநச்யதி" என்பதாக கீதையில் சந்தேகக்காரன் நாசமடைகிறான் என்று வேறு சொல்லியிருக்கிறாரே?. குருவின் கூற்றில் சந்தேகத்தை எழுப்பி, அதன் மூலமாக விநச்யதி என்று பகவானது சாபத்தை ஏற்பதை எப்படி விநயமாகச் சொல்வது என்று தோன்றலாம். இங்கே பரிப்ரசனத்தை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது குருவை வளைத்து வளைத்து கேள்வி கேட்பது அல்லது அவரது கூற்றில் ஸந்தேகப்படுவது என்பதாக இல்லை. குரு சொன்னது தனக்கு நன்றாகப் புரிந்ததா என்று "தன்னைத் தானே" கேள்வி கேட்டு, ஆத்ம சோதனை பண்ணிக் கொண்டு, புரியாதவற்றை விளக்கமாக குருவிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளல் என்பது தான். தனக்கு அணு அளவு புரியவில்லை என்றாலும், மறைக்காது, ஒளிக்காது அதனை குருவிடம் சமர்ப்பித்து, அதனை தெளிவு பெறுதல் என்பது வினயம் தானே?.

நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 7; பக்கம் 286-288

எழுதியவர் : முரளிதரன் (21-Jan-14, 6:04 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : kural
பார்வை : 67

மேலே