அம்மா நீ தான்

அவணி இதனை
அணியல் செய்யும்
அழகு மிகுந்த
பொருட்களிலே
புவனம் போற்றும்
சிறந்த பொருளெது
சிந்தித்து நானும்
சுயம் இழந்தேன்.

சூரியன் என்று
சிலாகித்துச் சொன்னேன்
சிறு மேகம் வந்து
மறைத்தது அதனை;
சந்திரன் என்று
அந்திமப் பெயராய்
அறைகூவிட ஏலாமல்
தேய்கிறது இன்று.

ஒளியெனச் சொன்னால்
இருட்டின் முன்னே
விருட்டென ஓடி
ஒளிந்து கொண்டது;
இருள் என்றாலோ
விடியல் வந்ததும்
குடிபெயர்ந்து போய்
கூர்மை இழந்தது.

அன்பு என்றாலோ
அடுத்தவர் அதனை
திருப்பித் தந்திடும்
நிபந்தனை கொண்டது;
ஆசை அதுவோ
அளவே இல்லாமல்
ஓசையும் செய்யாமல்
ஓங்கி வளருது.

காதல் என்றால்
காமத்தின் வேரென
காமியப் பொருளாய்
காட்டி நிற்குது.

அகிலம் அனைத்திலும்
புல்லரே ஆயினும்
இடிதாங்கி போலே
மடிதாங்கும் அன்னையர்
பேரழகு கொண்ட
அவ்வை என்பேன்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (22-Jan-14, 11:48 am)
Tanglish : amma nee thaan
பார்வை : 117

மேலே