இதுதான் அரசாங்கமோ
வேரானது விழுதாவதும் விழுதானது பழுதாவதும்
காரானது மழையாவதும் மழையாலிம் மண்வாழ்வதும்
சீரானது சிதைவாவதும் சிதைவானது சிறப்பாவதும்
தீராதது தீர்வாவதும் தெய்வமானது தருவதாகுமே!
(இ)ராவானது பகலாவதும் பகலானது இரவாவதும்
தீவானது கடலாவதும் கடலாலொரு தீவாவதும்
பூவானது காயாவதும் காயானது கனியாவதும்
ஏவாதொரு செயலாவது இயற்கையின் வரமாகுமே!
இல்லாதவன் தினமேங்கவும் இருள்வாழ்வினிற் திண்டாடவும்
எல்லாவகை அல்லல்களும் இன்பங்களைத் துண்டாடவும்
கல்லாதவர் கண்ணீருமே கற்றோர்களால் காசாகியே
பொல்லாதவர் புகழ்சேர்த்திட புவிவாழ்பவர் துதிபாடுவதோ?
தாயானது மலடாவதும் மலடானது தாயாவதும்
பேயாதது மழையாவதும் பிரிவானது உறவாவதும்
தேயாநிலை நிலவாகியே தினந்தோருமே ஒளிவீசியே
ஓயாநிலை அரசாண்டிட உருவானது அரசாங்கமோ?