தலைமுறையொன்று விஞ்சிய தீக்கனல்

வீதியெலாம் எரிந்த
ஈழத் தமிழனுக்காய்-உடல்
மேனியெலாம் தீப்பிடித்த
ஒரு தமிழன்

தமிழ்ச் சாதியின்
அழு குரலும்
ஓலமும்
கண்டு கொதி நீர் வடித்த
முத்து
படைக்கலங்கள் அற்று
தன்னம் தனியே
வாழ்ந்த தமிழ் வீரத்தின் சொத்து

ஊழியாடி உதிரம் குடித்து
ஆழி சூழ் தமிழீழத்தை
அழி அழியெனப் பாடிய
இத்(த)தாலியையும்
சக்கர நாற்காலியையும்
தன் தீயால் சிரித்து –கோபத்தை
கொப்பளித்தவன்

அய்ந்து விரல்காரியின் மடியில்
ஆதவனை அடகு வைத்து
சிதைந்து போகும் தமிழன் உயிரில்
வரங்களை வாங்கிய
கோபாலபுரத்தினை
ஊழிக் கொட்டகையென
உலகுக்கு உணர்த்தியவன்
தன் உயிரை அக்கினிக்கு
உயில் எழுதி
சாத்தியவன்

முற்றம் முழுதும் முற்றாக
தமிழன் அழிய
முகம் தொடும் தூரத்தில்
நின்று கொண்டு
அகம் நொந்து போன –தமிழ்
அகத்து
அறம் கொண்ட அடையாளம்.

செத்துப்போவார் இனி ஈழத் தமிழர்
கொத்துக் கொத்தாயென
பதறி பதறி தீயில் உருகிய முத்துக்குமார்

குரல்வளை நெரித்த
பாரத தாயின் கரங்களை
உயிருலை வைத்து
உதற முனைந்தவன்
தொப்புள்கொடியுறவை
காக்க வலுவற்ற
கையாலாகாத்தனத்தின்
தாக்கம் உணர்ந்தவன்

நாட்டினை எரித்த அனுமன்களை
உயிர் கூட்டினில் தீவைத்து
வெந்தவன்

புலிய நல்லூரில் பூப் பூத்த தீயின்
வலிமையை
புலிகளும் மதித்தனர்
கண்ணீர் வடித்தனர்
அலங்கார மொழிகளும்
அடுக்கு வசனங்களும்
மேடைகளில் கட்டும் வாச மாலைகளும்
தடுக்காது உயிர்ப் பலியையென
மிடுக்காக விரைந்தவன்

இத் தலைமுறைக்கு
தமிழீழத்தின் தாகத்தை
தமிழ்நாட்டில் தந்தவன்

சோகித்துக் கண்ணீர் விட்டு
உன் திருவுருவப் படத்திற்கு
பூவைத்து
மேடையில் உன் புகழ் பாடியாடிட
விருப்பில்லையெனக்கு
தமிழர் வானம் விடியும் நேரம்
தாகம் எல்லாம் தீர்ந்த காலம்
கானம் எழுதுகிறேன்
தோழனே உனக்கு
அதுவரை நீஎரிந்த தீயின் சுவாலையை
தூக்கி சுமந்து
கணைகளை எய்கிறேன் கயவருக்கு .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (29-Jan-14, 10:26 am)
பார்வை : 85

மேலே