காலிபாட்டில்
வேலைக்குச் செல்லும் எல்லோரும் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வதுண்டு. அல்லது அலுவலகத்தில் தண்ணீர் இருப்பதால் மதிய உணவை மட்டும் கொண்டுசெல்வர்.
நானோ விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு காலி பாட்டிலை எடுத்துச் செல்கிறேன். அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பெல்லாம் இல்லை. ஆனால் சொல்லத்தக்கக் காரணமொன்று இருக்கவே செய்கிறது.
விடுதியில் தண்ணீர் சுவை குன்றியிருப்பதாக நான் எண்ண ஆரம்பித்ததிலிருந்து பெரிய குடுவைகளில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கப் பழகிவிட்டேன். அலுவலகத்தில் அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டு விடுதியில் மாநகராட்சித் தண்ணீரைக் குடிப்பது பிடிக்கவில்லை. அந்த பெரிய குடுவையின் தண்ணீரினை அறைக்கு ஒருவர் வாங்க ஆரம்பித்தனர்.
ஒரு அறையில் நான்கு பேர் தங்கியிருப்பார்கள். முன்னர் தங்கியிருந்த என் அறைத் தோழிகளுடன் நானும் அந்தக் குடுவை நீரைத்தான் குடித்துக் கொண்டிருந்தேன். மாதத்திற்கு எத்தனை குடுவை தண்ணீர் செலவு ஆகிறதோ அதனை நான்கு பங்காகப் பிரித்துப் பணம் கொடுத்து விடுவோம். அந்த குடுவையைப் பார்க்கும் போது பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் அமிலம் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு புட்டியின் பெரிய வடிவமாகத் தோன்றும். அதை தலைகீழாகக் கவிழ்த்து வைத்து கீழே ஒரு சின்ன வாயகன்ற குடுவைக்குள் திணித்து வெற்றிடக் கோட்பாட்டின் மூலமாக ஒரு அறிவியல் நிகழ்வே நினைவுக்கு வந்துபோகும் தண்ணீரைப் பாட்டிலில் பிடிக்கும் தோறும்.
ஒவ்வொருவராக மூன்று அறைத் தோழிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக அறையைக் காலி செய்து சென்றனர். அவர்கள் செல்லும் போது இருந்த பெரிய குடுவை தண்ணீர் தீர்ந்த நாளொன்றில் இரண்டு பேர் வந்து சேர்ந்தனர். அவர்களது நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் எனக்கு ஒத்துப் போகாததால் அவர்களோடு ஒட்ட முடியவில்லை. இரண்டடி தூரம் கூட இடைவெளி இல்லாத படுக்கைவிரிப்புகளைக் கொண்டிருக்கும் எங்களுக்கிடையில் உப்புக்குக் கூட பேச்சு வார்த்தை கிடையாது. வெகுதூர இடைவெளி எங்களுக்குள் பரந்து விரிந்து கிடந்தது. முன்னர் இருந்த அறைத்தோழிகளுடன் வாங்கி வைத்திருந்த வாயகன்ற குடுவையை இப்போது வந்திருக்கும் அவர்கள் பயன்படுத்தத் துவங்கினர். நானும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் பெரிய குடுவைத் தண்ணீரை வாங்கி வைத்துக் கொண்டார்கள். நான் அதில் பங்கு எடுத்துக் கொள்ளவில்லை.
அப்போதுதான் அலுவலகத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிக்க ஆரம்பித்தேன். இரவு குடிப்பதற்கும், காலை எழுந்தவுடன் குடிப்பதற்கும் நான் அலுவலகத்திலிருந்து கொண்டு வரும் ஒரு பாட்டில் தண்ணீர்ன் சரியாக இருந்தது.
தினமும் விடுதியில் இருந்து காலி பாட்டிலைக் கொண்டு வந்து அலுவலகத்திலிருந்து மாலை திரும்பும்போது தண்ணீர் எடுத்துச் செல்வேன். இதுவே ஞாயிற்றுக்கிழமை குடிப்பதற்கு சனிக்கிழமை மாலை இரண்டு பாட்டிலாக கொண்டுவர ஆரம்பித்தேன்.
அலுவலகத்திற்கு செல்லும்போது விட்டுவிடுதலையாகி சிட்டுக்குருவியைப்போல் செல்வேன். மாலை திரும்பும்போதோ முதுகில் வீட்டைச் சுமந்து ஊர்ந்துசெல்லும் நத்தைபோல் வருவேன். தண்ணீர் நிரம்பிய பாட்டில்களைக் கொண்டு வருவது ஒரு பெரும் சுமையை மட்டுமின்றி அலுவலக வேலையையும் சுமந்து வருவதாய் தோன்றிற்று. அலுவலகத்திற்கு செல்லும் போது சிறகடித்துச் செல்லும் நான் திரும்பும் போது அந்த சிறகில் ஈரம் பட்டு கணக்க ஆரம்பித்து வலியுடன் வருவது வாடிக்கையானது.
ஒருமுறை அறையில் இருந்த ஒருத்தி இன்னொருத்தியிடம் ‘எப்டித்தான் தண்ணி குறையுதோடி’ என்று சொல்ல ‘தண்ணியக் கூட திருடுறாங்க.. என்ன பண்றது?’ என வேறொருத்தி அதற்கு பதில் சொல்ல, அதைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம், கோபம் எல்லாம் கலந்து ஆகப் பெரும் வெறுப்பாக மாறியது. நாம் செய்யாத தவறுக்காக சுமத்தப்படும் பழியை எதிர்கொள்கிற சூழ்நிலை மிகவும் குரூரமான சிந்தனைகளை நமக்குள் விதைத்து விடும்.
என் பள்ளி நாளொன்றில் நான் செய்யாத தவறுக்காக தண்டனை அளிக்கப்பட்டது. ஆங்கில ஆசிரியையின் வகுப்பு நேரத்தில் யாரும் பேசக் கூடாது என்பது கட்டாய விதி. ஒருமுறை எனக்குப் பின்னாலிருந்த இருவர் ஏதோ பென்சிலோ, அல்லது எத்தனையாவது பக்கமோ என்று கேட்க ‘பாடம் நடத்தும் போது என்ன பேச்சு’ என்று அங்கிருந்து சாக்பீஸைத் தூக்கி எறிந்து அவர்களோடு என்னையும் சேர்த்து வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து விட்டார் அந்த ஆசிரியை. நான் பேசவில்லை என்று சொல்லியும் கேட்க வில்லை. அவரது முறைப்புக்கு முன்னால் சொல்ல வந்த வார்த்தைகள் கூட அடங்கிவிடும். அதற்குப் பிறகு அவரது வகுப்பில் ஆர்வம் குறைந்து போய், என் மனதிலிருந்து விலக்கி வைத்திருந்தேன். ஒரு ஆசிரியரைப் பிடித்தால்தான் அவர் நடத்தும் பாடமும் பிடிக்கும். எனக்கு ஆங்கிலம் பிடிக்காமல் போனதற்கு செய்யாத குற்றத்திற்கு சுமத்தப்பட்ட பழியும் ஒரு காரணம்.
இப்போது விடுதியில் அதைப் போன்றே ஒரு சம்பவம். அவர்கள் நேரடியாகக் கேள்வி கேட்டிருந்தால் நேரடியாகப் பதில் சொல்லலாம். ஒரு யூகத்தின் அடிப்படையில் பேசப்படும் பேச்சுக்கு எப்படி பதில் சொல்வது?
‘எடுபட்ட சனியன், இவ தண்ணியக் குடிக்கிறதுக்கு சும்மா கெடக்கலாம்.’ என மனதிற்குள் கருவிக் கொண்டேன். மறுநாளில் இருந்து விடுதிக்கு வந்தவுடன் பையைத் திறந்து கொண்டு வந்த தண்ணீரை வெளியே எடுத்து ஒரு மடக்குக் குடித்து விட்டுத்தான் கட்டிலின் அடியில் வைப்பது வழக்கம். இப்படிப் போய்க் கொண்டிருந்த வழக்கத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தோசை சாப்பிட்டதன் காரணமாக இரவு முடிவதற்குள் தண்ணீர் தீர்ந்துவிட்டது.
காலியான ஒரு பாட்டிலில் அவர்கள் அறையில் இல்லாத சமயம் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டேன். அன்று ஒருமுறை நான் செய்யாத ஒரு செயலுக்குத் திட்டினார்களே அதற்கும் இதற்கும் கணக்கு சரியாகிவிட்டது என என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். சில சமயங்களில் நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ளாவிட்டால் குற்றவுணர்வு சுற்றி வளைத்துக் கொண்டு நமது செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடும்.