குலமகளே வாழ்க

""""குலமகளே வாழ்க...."""""

அருமை மகள் தவழ்ந்து வரும் அழகிற்கு
ஆயிரம் பொன் கொடுத்தாலும் ஈடாகிடுமோ...!
இனிமைகளை எப்போதும் இறைத்துவிடும் பேதையிவள்,
ஈடுஇணையற்ற கலைவாணி அம்சம்..
உலகமறியா பெதும்பையாக வெகுளியாக வளர்ந்தவளை,
ஊர்கூடி ஆசிர்வதிக்கும் இனிய தருணமும் பிறந்தது.
எங்கள் வீட்டு குலக்கொழுந்து இனிய மங்கையானாள்.
ஏகப்பட்ட சீர்வரிசையில் மடந்தை இளவரசியாய் பிரகாசித்தாள்.
ஐப்பசி திங்களில் அரிவை இவளுக்கு அருமைபெருமையாய்,
ஒரு மன்மதக்காளை மணாளனாக வந்தான்.
ஓராயிரம் தேவர்கள் வாழ்த்துப்பண் இசைக்க,
ஒளதா மேலேற்றி தெரிவையையும் காளையையும் மணமக்களாய்
ஊர்க்கோலம் கொண்டு சென்றனர் உற்றமும் சுற்றமும்..
இனிதாய் துவங்கிய இந்தப் பேரிளம் பெண் வாழ்க்கையில்
இலக்கியமாய் குழந்தைகள் இருவர் இனிதாய் பிறந்தார்கள்.
முழுமை பெற்ற காதல் வாழ்க்கை முதுமைவரை
சீரும் சிறப்புடனும் வாழ்ந்திட
நாமும் இவர்களை வாழ்த்திடுவோமே.. ....!!!

ஔதா -- அம்பாரி

1 -8 வயது பேதை
9 - 10 வயது பெதும்பை
11 - 14 வயது மங்கை
15 - 18 வயது மடந்தை
19 - 24 அரிவை
25 - 29 தெரிவை
30 வயதுக்கு மேல் பேரிளம் பெண்
பெண்களின் இத்தனைப் பிரிவுகளை உயிரெழுத்துக்களில் வரிசைப்படுத்தி எழுதிய சிறு முயற்சி தமிழ்த்தாயின் ஆசிர்வாதத்துடன்.
*****************************************************************
பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (25-Feb-14, 5:16 pm)
பார்வை : 141

மேலே