மௌனத்தின் உச்சம்
வெளிநடப்புக்களையும்
வரவேற்புகளையும்
மெத்தனமாய்ச் செய்வோரையும்
ஆதரிக்கும்
குடும்ப உறுப்பினர்
அவமதிப்புக்களின்
பக்கபலம்
வெகுண்டெழும் காற்றில்
பின்புறத் தாக்குதலுக்குத்
துணியும் பேடி
அலங்காரத்
தற்காப்புக் கலை
வீட்டுக்கொரு பிள்ளையாய்
உருவாக்கப்படும்
போர்நெஞ்சம்
தட்டுங்கள் திறக்கப்படும்
என்பார் சிலர்
மதியாதார் விரும்பாத
முகம்
மூடிமறைக்கும் குணம்
ஒருவகையில்
முன்னறிவிப்புப் பலகை
திரையுடுத்தி மானம் காக்கும்
நாகரீகம்
ஓசையெழுப்பிக் கூப்பிட
ஓடோடி வரும்
எதிர்பார்ப்புகளுக்கான
அறிமுகத் தாழ்ப்பாள்களின்
திறப்பு
மௌனத்தின் உச்சம்
காத்திருத்தலின் மிச்சம்
கோபச் சாட்டைகள்
சுழற்றிப் பாய
உறுமும் கம்பீரம் ! - சாவிக்குத்
தெரிந்த ரகசிய ஆவண
அடக்கம் - கதவு .......!