அவமானச் சடங்குகள்

கொட்டும்
மழைக்குழைவுகளில்
இழையும்
வண்ணம் தீட்டா
மண் பொம்மைகளே
ஆணவச் செருக்குகள்

அழிதல்
அவையறியா - ஆனால்
அவையறியும்

சுகந்தப்பூக்களில்லை
நெடியுடைய
வறட்டுப்பூக்களின்
ஊஞ்சலாட்டம் ,
தற்பெருமைகளின்
அலையோட்டம் !

முறுக்கேறிய
நரம்புகளில் மீட்டப்படா
இசையொன்றின்
குருட்டுவிரல்
கர்வம் தலைக்கேறல்

அழுக்கு ஓடைகள்
பெருக்கெடுக்கக் கூடும்
கரிய கடல்
அவமதித்தல் கோணம்

மிரளலாம்
மெல்லினமும் வல்லினமும்
இடையினம்
கவனிக்கப்பட வல்லது

புல்லுருவிப்போகும்
வேடிக்கையாய்
ஒரு தீண்டல் - அதிலென்ன
மேதாவிச் சீண்டல்

முகமூடி
அணிந்துகொள்
காற்றே - விஷப் பூச்சிகள்
வெளியேறும் தருணத்தில்
வெகுளியாய் இராதே

இம்முறை அல்லாத
பிறிதொரு முறை - சொற்ப
மரணம் நிகழக் கிடக்கிறது
மடம்

அஞ்சாதே !
தெரிந்தே அல்ல !

உதைவாங்கும்
பந்தொன்று கிழிபடலாம்
அது தாங்குதிறனின் எல்லை !
உந்துவிசையின்
உணர்ச்சிப் பெருக்கு - அஃது
மிதிபடுதல் இல்லை !

எழுதியவர் : புலமி (26-Feb-14, 10:51 pm)
பார்வை : 579

மேலே